×

போதையில் பெண்ணை ரூமுக்கு அழைத்த விவகாரம் நட்சத்திர ஓட்டல் பாரில் 2 குரூப் திடீர் மோதல்: நுங்கம்பாக்கத்தில் அதிகாலை பரபரப்பு; 8 பேர் சிறையில் அடைப்பு

சென்னை: போதையில் பெண்ணை ரூம்முக்கு அழைத்த விவகாரத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் பாரில் 2 குரூப்கள் திடீரென மோதிக் கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாஜ் ஓட்டல் பாரில் தகராறு நடப்பதாக நேற்று அதிகாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது 2 குரூப்புகளுக்கிடையே மோதல் நடந்ததும், அதில் 2 பேர் ரத்தக் காயத்துடன் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ஓட்டல் மானேஜர் பிரபு, நுங்கம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தபார். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மாமல்லபுரத்தில் ஐடியல் பீச் ரிசார்ட் உள்ளது. இதன் உரிமையாளர்கள் வின்ஸ்டன் பிரபு (37), அவரது தம்பி திவாகர் அரவிந்த் (35). இவர்கள் இருவரும் மாமல்லபுரம் 1வது குறுக்கு தெருவில் வசித்து வருகின்றனர். இவர்களது நண்பரின் மனைவிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் வளைகாப்பு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் நண்பர்களான கீழ்ப்பாக்கம் பிகேஆர் புரொடக்‌ஷன் உரிமையாளரான பிரனே (30), மென்பொருள் நிறுவனம் நடத்தும் ஜெயபிரகாஷ் (36), மருந்து கம்பெனி உரிமையாளரான வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த பாஸ்கர் (35) ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும், ஓட்டலில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அதே பாரில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தன் (29) என்பவர் தனது மனைவி மற்றும் அவரது தோழி, ஒரு திருநங்கை ஆகியோருடன் மது அருந்தி உள்ளார்.

அப்போது அரவிந்துடன் மது அருந்திக் கொண்டிருந்த மனைவியின் தோழியை, வின்ஸ்டன் பிரபு ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வின்ஸ்டன் பிரபு, அந்த தோழியிடம் சென்று அறிமுகமாகி பேசியுள்ளார். அவர்கள் மது அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தபோது, வின்ஸ்டனுடன் வந்தவர்களும் அந்த பெண்ணிடம் பேசியுள்ளனர். பின்னர் அவர்கள், அந்த பெண்ணை 5வது மாடியில் ரூம் புக் செய்துள்ளோம். வாருங்கள் என்று அழைத்துள்ளார். ஆனால் போதையில் இருந்த அந்த பெண் மறுத்து விட்டார். அப்போது வின்ஸ்டனுக்கும், அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாகிவிட்டது.

இதனால் அந்த பெண் தனது நண்பர்களான வக்கீல்கள் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த விஷால் கணேஷ் (26), குரோம்பேட்டையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (25) ஆகியோரை போன் செய்து அழைத்துள்ளார். அவர்கள் வந்து, ஏன் பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று வின்ஸ்டனிடம் கேட்டுள்ளனர்.இதனால் இரு குரூப்புக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் பாட்டிலால் தாக்கிக் கொண்டனர். அதில் ஐடியல் பீச் ரிசார்ட் மற்றும் நீலாங்கரையில் பீட்சா என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் வின்ஸ்டன் பிரபுக்கு நெற்றியில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அரவிந்தனுக்கு கழுத்து, தலையில் காயம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, இரு தரப்பைச் சேர்ந்த வின்ஸ்டன் பிரபு, திவாகர் அரவிந்த், பிரனே, ஜெயபிரகாஷ், பாஸ்கர், அரவிந்தன், விஷால் கணேஷ், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 8 பேரையும் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் ஏற்கனவே இதுபோல 2 கோஷ்டிகள் மோதிக் கொண்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தூண்டில் ராஜா, அதிமுக பிரமுகர் பிரசாத், அஜய் ரோகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் போதைப் பொருள் கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில்தான் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்ற பிறகு, மது பார்களை இரவு 11 மணிக்கு மேல் திறக்கக் கூடாது. நட்சத்திர ஓட்டல்களை 12 மணிக்கு மேல் திறக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தார். அனுமதித்த நேரத்திற்குப் பிறகு திறக்கப்பட்ட பார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு சென்னையில் இரவு நேரத்தில் நடக்கும் மோதல்கள் பெருமளவில் குறைந்து விட்டன. நட்டசத்திர ஓட்டல்களிலும் மோதல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய பணக்கார நண்பர்கள் மது அருந்தும்போது இதுபோன்ற மோதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். ஆனால் போலீஸ் கமிஷனர் அருணுக்கு, இவர்கள் பிடிபட்டிருக்கும் தகவல் தெரிய வந்தவுடன், கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்டவர்களுக்காக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தவறு செய்தவர்கள் மீது நுங்கம்பாக்கம் போலீசார், பிஎன்ஸ் 194(2)(2 பேருக்கு மேல் சண்டை போடுதல்), 191(3) (தாக்க முயற்சி), 296(பி) (பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 115(2) (கையால் அடித்தல்), 118(1)(காயம் ஏற்படுத்துதல்), 351(3) (கொலை முயற்சி), டிஎன்பிபிடிஎல்4 (பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல்) ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் ஏற்கனவே இதுபோல 2 கோஷ்டிகள் மோதிக் கொண்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தூண்டில் ராஜா, அதிமுக பிரமுகர் பிரசாத், அஜய் ரோகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் போதைப் பொருள் கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது.

Tags : Nungambakkam ,Chennai ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது