×

நெல்லையில் ஓரினச்சேர்க்கை செயலி மூலம் வரவழைத்து விருதுநகர் டாக்டரிடம் நகை, பணம் பறிப்பு: 4 பேருக்கு வலைவீச்சு

நெல்லை: ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான செயலி மூலம் விருதுநகர் டாக்டரை அழைத்துச் சென்று நூதனமாக மிரட்டி நகை, பணத்தை பறித்து தப்பிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, அண்ணா சிலை பின்புறம் உள்ள வாத்தியார் கணபதி தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் அஜித்குமார் (27). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 10ம் தேதி தனது மூத்த மருத்துவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக நெல்லைக்கு வந்துள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து கடந்த 11ம் தேதி மாலை ஊருக்குத் திரும்புவதற்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, தனது செல்போனில் கிரைண்டர் செயலியை பயன்படுத்தியுள்ளார். அப்போது, அதில் அறிமுகமான மர்ம நபர் ஒருவர், டாக்டரை வாட்ஸ்-அப் காலில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அந்த நபர் அழைத்ததின் பேரில், தென்காசி பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்ற டாக்டரை, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அரசினர் பொறியியல் கல்லூரி அருகே, ஒரு சுடுகாட்டுப்பகுதிக்கு டாக்டரை அழைத்துச் சென்றவர்
திடீரென அவரது ஆடைகளைக் களைந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மூன்று பேர் கொண்ட கும்பல் டாக்டரை சூழ்ந்து கொண்டு நிர்வாண வாலிபருடன் உன்னை புகைப்படம் எடுத்துவிட்டோம் எனக்கூறி டாக்டரை தாக்கி மிரட்டினர். அப்போது டாக்டர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்ட அந்தக்கும்பல், அவரது ஏடிஎம் கார்டையும் மிரட்டி பறித்துள்ளது.

பின்னர், டாக்டரை பைக்கில் அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச்சென்று ரூ.48 ஆயிரத்தை எடுத்து தருமாறு மிரட்டி பறித்தனர். பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே டாக்டரை இறக்கிவிட்டு, இனிமேல் நெல்லையில் பார்த்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டு கும்பல் தப்பிச்சென்றதாகக்கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து டாக்டர் அளித்த புகாரின் பேரில், மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கில் வந்த நபர் மற்றும் அவருக்கு உதவிய 3 பேர் கொண்ட கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : Virudhunagar ,Nella ,Virudhunagar District ,Aruppukkottai, Vathiar Ganpati Street ,Anna Statue ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...