சென்னை: சிறை வார்டனிடம் 22 சவரன் நகை, ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த பாஜ பெண் பிரமுகருக்கு 3 ஆணடு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூர் அடுக்கும்பாறை சுபம் நகரை சேர்ந்தவர் விஜய பானு (எ) ஷிபா மேத்யூ (36). பார்ப்பதற்கு ஆணைப் போல் துருதுருவென இருக்கும் இவர் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர். கடந்த 2012ம் ஆண்டு கூடுவாஞ்சேரி போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
புழல் பெண்கள் சிறையில் வார்டனாக இருந்த விதேச்சனாவிடம், ‘நான் டெல்லியில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் (சிஆர்பிஎப்) ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றுகிறேன். புழல் பெண்கள் சிறையில் நடைபெறும் முறைகேடுகள், பெண் கைதிகள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுவதை கண்டறிய, சிறைக்குள் கைதியாக வந்துள்ளேன். உங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன’ என, மிரட்டி ஐ.பி.எஸ்., அதிகாரி வேடத்தில் இருக்கும் போட்டோவை, பெண் வார்டனிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. அதை உண்மை என நம்பினார் விதேச்சனா.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த விஜயபானு பெண் காவலருடன் நட்பாக பழகி பதவி உயர்வு வாங்கி தருவதாக ஆசைக்காட்டி ஆவடி கோவில்பாதகையில் இருந்த அவரது வீட்டிலேயே தங்கினார். அப்போது, மேம்பாலம் கான்ட்ராக்ட் எடுக்க பணம் தேவை என கூறி சிறை வார்டனிடம் 22 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணத்தை விஜய பானு வாங்கினார். ஒருகட்டத்தில் விஜயாபானுவின் மோசடி தெரிய வந்ததால் சிறை வார்டன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் மொத்தம் 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விஜய பானுவை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2012ம் ஆண்டு முதல் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அண்மையில் இந்த வழக்கு ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் விஜய பானு ஆஜராகாததால் அவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, விஜய பானு மற்றும் அவரது உதவியாளர் மதிவாணன் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர். இதில் தேவராசன் என்பவர் இறந்து விட்டார். இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றம் 1-ல் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சரத்பாபு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அமுதா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
விஜயாபானு, மதிவாணன் இருவருக்கும் 3 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட விஜய பானு மீது சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா, வேலூர், சேலம் என பல்வேறு பகுதிகளில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. விஜய பானு ஏற்கனவே, வேலூர் மாவட்ட பாஜவில் எஸ்சி பிரிவு தலைவராக இருந்துள்ளார். கடந்த 2022ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் பாஜ சார்பில் 5வது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* சேலத்தில் ரூ.500 கோடி மோசடி
சேலத்தில் புனித அன்னை தெரேசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் விஜய பானு அறக்கட்டளை துவக்கி பண இரட்டிப்பு, அதிக வட்டி என மக்களிடம் ஏறக்குறைய ரூ.500 கோடி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து புகார்கள் குவிந்ததால் விஜயபானு அறக்கட்டளை அலுவலகத்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரூ.12 கோடி ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக விஜய பானுவை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
* ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்ய முயன்ற விஜயபானு
சேலத்தில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை துவங்கி பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பொதுமக்களிடம் பலகோடி ரூபாய் வசூல் செய்தனர். இந்த மோசடி தொடர்பாக, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபானு மற்றும் அவரின் கூட்டாளிகள் ஜெயபிரதா, பாஸ்கர், சையது முகமத், செந்தில்குமார், இவரது மனைவி கரோலின் ஜான்சிராணி ஆகியோரை கைது செய்தனர்.
விஜயபானு தரப்பிடம் இருந்து ரூ.12 கோடியே 68 லட்சம் பணம், தங்க நாணயம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் விஜயபானு தரப்பினர், ரூ.40 லட்சம் மதிப்புள்ள இடத்தை ரகசியமாக விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து, டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையிலான போலீசார் நில விற்பனையை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அவரது சொத்துக்கள் பட்டியலை எடுக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.
