×

பொதுமக்களை நடுங்க வைத்த ரீல்ஸ் மோகம் அணுகுண்டுகளை மாலைபோல் கட்டி பெட்ரோல் ஊற்றி வெடிப்பு: 2 வாலிபர்கள் கைது; ஒருவருக்கு வலைவீச்சு

மதுரை: மதுரையில் தீபாவளி நாளன்று அணுகுண்டு பட்டாசை மாலையாக அணிந்து பெட்ரோல் ஊற்றி வெடித்து ரீல்ஸாக வெளியிட்ட இளைஞர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்தனர். நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் இளைஞர்கள் சிலர் அணுகுண்டு பட்டாசுகளை மாலையாக கோர்த்து அணிந்து கொண்டும், பின்னர் வைகையாற்று பகுதியில் அணுகுண்டு மாலை மீது பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து ஊற்றி வெடிக்கவும் வைத்தனர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவு ெசய்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வெளியிட்டனர்.

அந்த ரீல்ஸில் டூவீலரில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடிக்கும் இளைஞர், கழுத்தில் அணிந்துள்ள அணுகுண்டு பட்டாசுகளால் கட்டிய மாலையை கழற்றி, அதன்மீது பெட்ரோலை ஊற்றுகிறார். ‘நாங்கள்லாம் அணுகுண்டு பயலுகடா’ என்றபடி, வைகையாற்றுக் கரையோர படிக்கட்டில் அந்த பெட்ரோல் ஊற்றிய அணுகுண்டு மாலையை போட்டு தீவைத்த துணியை அதன்மீது வீச, பெட்ரோலில் நனைந்த அணுகுண்டு பட்டாசுகள் படு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி, அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் அணுகுண்டு பட்டாசு மாலையை கையில் வைத்தபடி, ‘குவாரிக்கு வச்சுருக்கிற 15 கிலோ வெடிமருந்த வச்சுருக்கேன். உருட்டி உருட்டி வீசுனேன்… ஊரே காலியாகிடும்’ என்ற வசனத்துடன் மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள ‘நம்ம மதுரை’ லைட்டிங் போர்டு மீதும் அந்த அணுகுண்டு பட்டாசு மாலையை வீசுவது போலவும் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அணுகுண்டு மாலையை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மதுரை தத்தனேரி கீழ வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் சந்துரு, அரசரடி பகுதியை சேர்ந்த முத்துமணி மற்றும் வீரணன் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லோகஷ் சந்துரு, முத்துமணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவான வீரணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Madurai ,Diwali day ,Diwali ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது