சென்னை: சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் செலுத்த தாமதமானதால் டோல்கேட் தடுப்புகள் மீது காரால் மோதி உடைத்துவிட்டு வெளியேற முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயணி ஒருவர், காரில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். டோல்கேட்டில், பார்க்கிங் கட்டணம் செலுத்த காரை நிறுத்தினார். அப்போது, சர்வர் கோளாறு ஏற்பட்டு பார்க்கிங் கட்டண விவரங்கள் பதிவிறக்கம் ஆகவில்லை. 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பயணி டோல்கேட் ஊழியரிடம் வாக்குவாதம் செய்தார்.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பயணி காரை ஓட்டிச் சென்று தடுப்புகளை உடைத்து வெளியேற முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டோல்கேட் ஊழியர்கள் காரை வழிமறித்து நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, டோல்கேட் ஊழியர்கள் சர்வர் கோளாறு காரணமாக பார்க்கிங் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும், தடுப்புகளை உடைத்ததற்காக காரின் உரிமையாளர் ரூ.7,500 அபராதம் செலுத்த வேண்டும், என்றனர். தொடர்ந்து, போலீசார் இருதரப்பினரிடம் விசாரித்தனர். பின்னர், ரூ.3 ஆயிரம் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு கார் உரிமையாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பயணி ரூ.3ஆயிரம் அபராதம் செலுத்தி ரசீது பெற்று காரை எடுத்துச் சென்றார்.
