கோவை: கோவை அருகே வடமாநில தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தந்தை மகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார் (23). இவர் தனது அண்ணன் மற்றும் நண்பர்கள் சிலருடன், கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி கணபதி நகரில் தங்கி சிட்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடன் பணியாற்றிய 8 பேர் சேர்ந்து ஒரே அறையில் தங்கி இருந்தனர். அவர்களே முறைவைத்து சமையல் செய்து, பாத்திரம் கழுவ வேண்டும். இதுதொடர்பாக அவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வார விடுமுறையான நேற்று முன்தினம் இரவில் அறையில் மது அருந்தி உள்ளனர். பின்னர் ராகேஷ்குமாரும், அவரது அண்ணனும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் ராகேஷ்குமாரின் காலை மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது தொடர்பாகவும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜாகுமார்(26) என்பவர், ராகேஷ்குமாரின் கழுத்தை நெரித்துள்ளார்.
மற்ற 5 பேரும் சேர்ந்து அவரையும், சகோதரரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். ராஜாகுமார் கத்தியால் ராகேஷ்குமாரின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலை ராகேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, பீகாரை சேர்ந்த ராஜாகுமார், அவரது தந்தை நகுல்(52), பிகாஷ்குமார்(25), அவ்தேஷ்குமார்(23), ரவிக்குமார்(27) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
