சென்னை: சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’ மோசடியில் முன்னாள் அரசு செயலாளரிடம் ரூ.57 லட்சம் சுருட்டப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்வர் டாக்டர் இராமசாமி. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் , டிராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) என்று சொல்லி ஒரு தானியங்கி அழைப்பு வந்தது. அழைப்பில், அவரது பெயரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டதாகவும், சட்டவிரோத விளம்பரங்கள் உள்ளிட்ட 14 புகார்கள் அவர் மீது இருப்பதாகவும் கூறப்பட்டது. ஒரு மணி நேரத்தில் டெல்லி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
பின்னர், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அவரிடம் வாட்ஸ்அப் இல்லை என்று சொன்னதும், அதை பதிவிறக்கச் சொன்னார்கள். டெல்லி போலீஸ் அதிகாரிகள் போல் நடித்த மோசடிக்காரர்கள், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, மனித கடத்தல், மும்பை கனரா வங்கியில் அவரது பெயரில் கணக்கு தொடங்கியது போன்ற பொய் குற்றச்சாட்டுகளைச் சொன்னார்கள். இதில் பயந்துபோன அவர் ரூ.57 லட்சத்தை மோசடிக்காரர்களின் கணக்குகளுக்கு அனுப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். சைபர் கிரைம் உதவி ஆணையாளர் தலைமையிலான குழு விசாரணை செய்தது.
விசாரணையில், அனுப்பிய பணம் பல வங்கிக் கணக்குகளுக்கு பிரிக்கப்பட்டு, மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் காசோலைகள் மூலம் எடுக்கப்பட்டதும், கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டதும், அதே நாளில், முகவர்கள் உதவியுடன் பணம் வெளிநாட்டுக்கு மாற்றப்பட்டதும் தெரிய வந்தது. இந்த மோசடி கும்பலை ஒழிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், வாட்ஸ்அப் அழைப்பு கம்போடிய தலைநகர் நோம் பென்னில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பல கணக்குகளுக்கு பிரிக்கப்பட்டு, போலி நிறுவனங்கள் வழியாக வெளிநாட்டு வாலெட்டுகள் அல்லது கிரிப்டோ பரிமாற்றங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த பரிவர்த்தனைகள் டோக்கியோ மற்றும் சிங்கப்பூரில் இருந்து இயக்கப்பட்டன. இந்த மோசடி கும்பலைத் தேடி வருகின்றனர்.
இது குறித்து சென்னை காவல் ஆணையாளர் அருண் கூறும்போது, ‘‘போலி அழைப்புகள், அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள், போலி செயலிகள், வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறியாத கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டாம். மோசடிக்காரர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கி உதவுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மோசடியால் பணம் இழந்தால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணுக்கோ அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதளத்துக்கோ புகார் செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.
