சிவகிரி: தென்காசியில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி:
அமமுக தொண்டர்கள், நிர்வாகிகளின் மன ஓட்டத்தை தெரிந்து கொண்டு அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில்தான் முடிவு எடுப்போம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக யார் என்பதை நிரூபிப்போம். தொகுதி தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து தேர்தலுக்கு தயார் செய்து வருகிறோம். அப்போதுதான் அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியும். தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவை அமமுக கொடுத்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது வேறு. இந்த தேர்தலில் அமமுக நிலைப்பாட்டை டிசம்பரில் நிச்சயம் வெளிப்படையாக தெரிவிப்போம். மக்கள் விருப்பப்படி அமமுக கூட்டணி அமைக்கும். நிர்வாகிகள் தொண்டர்களின் கருத்தின் அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேஜ கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா என்று நயினார் நாகேந்திரனிடம் கேளுங்கள் என்று ஏற்கனவே கூறிய டிடிவி.தினகரன் இப்போது, கூட்டணி குறித்து டிசம்பரில்தான் முடிவு என்று கூறியிருப்பதால் தே.ஜ.கூட்டணியில் இருந்து அமமுக விலகலாம் என்று கூறப்படுகிறது.
