பெங்களூரு: காங்கிரஸ் கட்சி மேலிட அறிவுறுத்தலின் படி நானும் சித்தராமையாவும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகவும், அதன்படி நடப்போம் என்றும், கட்சி மேலிட கட்டளையை மதித்து நடப்போம் என்றும் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கார்வாரில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்வராக இருக்கமாட்டார் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. கட்சி மேலிடம் அவருக்கு ஆதரவாக இல்லை என்றும் நான் கூறியதில்லை.
கண்டிப்பாக கட்சி மேலிடம் அவருடன் இருக்கிறது. அவர் தான் இன்றைக்கு முதல்வர். கட்சி மேலிட முடிவுப்படி அவர் முதல்வராக இருக்கிறார். கட்சி மேலிட அறிவுறுத்தலின்படி நாங்கள் இருவரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கிறோம். நாங்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். நாங்கள் கட்சி மேலிட முடிவுக்கு உடன்பட்டு நடப்போம் என்று ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறோம். முதல்வர் மாற்றம் குறித்து ஊடகங்கள் நீங்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எங்களுக்குள் அதுதொடர்பான விவாதம் எதுவும் இல்லை. கட்சியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்போம்’ என்றார்.
