×

தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்: மாநில செயலாளர் சண்முகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதுமுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ‘காதலுக்கு அரண் அமைப்போம் சாதிக்கு சவக்குழி செய்வோம்’ எனும் தலைப்பில் ஆணவக் கொலைகள் குற்றங்களுக்கு எதிரான சமூக நீதி கருத்தரங்கம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பெ.செயலாளர் சண்முகம் பேசியதாவது: இந்தியாவில் சாதி என்பது ஒழிக்கப்பட்டு விட்டது. நாங்கள் பெற்று பாசமாக வளர்த்தோம், அன்பாக வளர்த்தோம் என்றெல்லாம் சொல்லிவிட்டு காதலித்து திருமணம் செய்தால் கொலை செய்து விடுகிறார்கள். நான் எதனை வேண்டுமானாலும் இழப்பேன், பாசமாக வளர்த்த என் மகளை இழப்பேன், பாசமாக வளர்த்த என் மகனை இழப்பேன்… ஆனால், என்னுடைய சாதியை இழக்க மாட்டேன் என்கிற வெறிதான் இதுபோன்ற கொலைகள் நடப்பதற்கான அடிப்படை.

சாதி மறுப்பு திருமணங்கள் நடத்திக் கொள்வதற்கான இடங்கள் கூட இல்லை. திருநெல்வேலி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அதுபோன்று ஒரு திருமணத்தை நடத்தினோம். காவல்துறை பாதுகாப்போடு நடத்தினோம். திருமணம் நடத்தி முடிப்பதற்குள் காவல் துறையே தகவல் சொல்லி சாதி அமைப்புகள் அலுவலகத்திற்கு வந்து விட்டார்கள். அதற்குள்ளே மாப்பிள்ளை பெண்ணிற்கு தாலி கட்டி விட்டார். தாலி கட்டிய பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் எங்களுடைய அலுவலகத்தை அடித்து உடைத்து விட்டார்கள்.

சாதி மறுப்பு திருமணங்கள் செய்வதற்கான இடமாக எங்களுடைய கட்சியின் மாவட்ட அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள் இனி இருக்கும். எங்களுடைய கட்சியின் அலுவலகங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிடுகிறேன். காதல் திருமணத்தை நடத்திக் கொள்வதற்கான இடம், அதற்கான பாதுகாப்பு எங்களைப் போன்றவர்கள் தலைமை தாங்கி நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம். அதனால் தைரியமாக காதலியுங்கள். காதலித்து விட்டு வாருங்கள். திருமணத்தை செய்து வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எல்லா சாதியிலும் முற்போக்குவாதிகள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சாதி இந்துக்கள் எல்லோரும் சாதியவாதிகள் என்கிற முடிவிற்கு வந்துவிடக் கூடாது. நாம் ஒன்று சேர்ந்தால் சாதி வெறிக்கு எதிராக ஒரு பெரும் படையை தமிழ்நாட்டில் ஒன்று திரட்ட முடியும். அதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு சாதி வெறியர்களுக்கு எதிராக களத்தில் நிறுத்துவதற்கு மூலமாக ஒரு திட்டமிடுதலை செய்தாக வேண்டும். கவின் செல்வகணேஷ் கொலையை சேர்த்து திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வருட காலத்தில் 240 கொலைகள் நடந்துள்ளன. அங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எல்லோரும் வெறிபிடித்து திரிகிறார்களா எனவும் தெரியவில்லை.

இது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள கொலைகள். மூடி மறைக்கப்பட்டவை எத்தனை என தெரியவில்லை. 240 கொலைகள் என்பதை எல்லாம் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. கொலை வெறி பிடித்து அலைகிறார்களா என்கிற அளவிற்கு நிலைமை கைமீறி போய்விட்டது. ஆகவே, மிக அவசரமாகவும் அறிவுபூர்வமாகவும் இடைவிடாமல் தலையிட வேண்டிய பிரச்னை இது. சாதி வெறிக்கு எதிராகவும் சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். இவ்வாறு பேசினார்.

Tags : Marxist ,Tamil Nadu ,Secretary of State ,Sanmugham ,Chennai ,State Secretary ,Marxist Party, ,B.P. ,Marxist Party ,Kaviko Forum ,Maylapur, Chennai ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...