×

மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் அத்துமீறி நிறுத்திய டூவீலர்களுக்கு பூட்டு

*நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும், சுற்றுவட்டார கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பணி நிமித்தமாகவும்,பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களில் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களை காலையில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

பின்னர், மாலையோ அல்லது மறுநாளோ வந்து வாகனங்களை எடுத்துச்செல்கின்றனர்.இதனால் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களால் வாகனங்களை நிறுத்த முடிவதில்லை. இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், கடையின் வாடகைதாரர்களுக்கும் சில சமயங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது.

நேற்று காலை மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா உத்தரவின் பேரில் பேருந்து நிலைய வணிக வளாக பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர்கள் அத்துமீறி நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சங்கிலியால் கட்டி பூட்டு போட்டனர். இதனால் வணிக வளாகத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில், ‘‘மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளின் வாடகைதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனிடையே வளாகத்தில் பொதுமக்களில் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சில நாட்களுக்கு பின்னரே எடுத்து செல்கின்றனர்.

இதனால் கடையின் வாடகைதாரர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இதனை தவிர்க்க தற்போது வாடிக்கையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. முதன்முறை என்பதால் இந்த வாகனங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய பின்னரே வாகனங்கள் விடுவிக்கப்படும். இந்த நடவடிக்கை தொடரும்’’ என்றார்.

Tags : Matuppalayam ,Metuppalayam ,Metuppalayam Bus Station ,Goa ,station ,
× RELATED வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு!