×

தவெகவின் அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, எடப்பாடி படத்தை விஜய் வைப்பார்: சீமான் கிண்டல்

சென்னை: ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை 10 ஆண்டு தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். அதுபோன்ற சட்டமும் கொண்டு வர வேண்டும் என்று சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மக்களின் பிரதிநிதியாக பொறுப்புள்ள பதவிக்கு வருபவர் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவரை பதவி நீக்கம் செய்வது என்பது ஏற்புடையதுதான். தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதையும் தடுக்க வேண்டும். வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் அடுத்த 10 ஆண்டு தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். அதைப்போன்ற சட்டமும் கொண்டு வர வேண்டும். புதிதாக கட்சி தொடங்கி நடத்துபவருக்கு திமுகவை ஒழிப்பது மட்டுமே லட்சியமாக இருக்க கூடாது. நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதுதான் கூற வேண்டும்.

அதை செய்யாமல் அண்ணா, எம்ஜிஆர் படங்களை எல்லாம் போட்டுக்கொண்டு இருப்பது ஏன்? ஒருவர் ஒரு கட்சியின் தோற்றுனர். அடுத்தவர் இன்னொரு கட்சியின் தோற்றுனர். ஆனால், அண்ணா தொடங்கி வைத்த கட்சியை தான், நீங்கள் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்த 2 தலைவர்கள் தொடங்கிய அரசியல் தான் இருக்கிறது. ஒன்று அண்ணா தொடங்கியது, மற்றொன்று எம்ஜிஆர் தொடங்கியது. இவர் அடுத்த மாநாடு நடத்தும் போது ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் படங்களையும் போடுவார் போல் தெரிகிறது. இவ்வாறு நேரத்துக்கு தகுந்தாற் போல், அவர் செய்து கொண்டு போவது ஏற்புடையது அல்ல. அவருக்கு பின்னால் திரண்டு இருக்கும் நண்பர், நண்பிகளுக்கு சரியான வழியை காட்ட வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

Tags : Vijay ,Jayalalithaa ,Edappadi ,Tamil Nadu Congress ,Seeman ,Chennai ,Naam Tamil Party ,
× RELATED மூலதன செலவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும்: அன்புமணி அறிக்கை