×

சின்சினாட்டி ஓபன் இறுதியில் வேட்டையாட துடிக்கும் இகா; வேகத்தில் மிளிரும் ஜாஸ்மின்

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் நேற்று, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவர் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொள்ள உள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினாவை (26 வயது, 10வது ரேங்க்) ஒரு மணி 38 நிமிடங்கள் போராடி, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (24) 7-5, 6-3 என நேர் செட்களில் வெற்றிப் பெற்றார்.

நேற்று நடந்த அரையிறுதி போட்டியில், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி, ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மெடோவா (28 வயது, 4வது ரேங்க்) மோதினர். சுமார் 2மணி 20 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் பவோலினி 6-3, 6-7 (2-7), 6-3 என்ற செட்களில் வெற்றி வாகை சூடினார். இந்த வெற்றியின் மூலம் இகா – பவோலினி முதல் முறையாக சின்சினாட்டி ஓபன் இறுதி ஆட்டத்தில் களம் காண உள்ளனர். இந்திய நேரப்படி இன்று காலை இப்போட்டி நடைபெற உள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவில் கேப்ரிலா-எரின் சாம்பியன்: சின்சினாட்டி ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று, கேப்ரிலா டாப்ரோஸ்கி (33), நியுசிலாந்து வீராங்கனை எரின் ஹோப் ரூட்லிஃப் (30) இணை, ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்ட்ரா பனோவா (36), சீன வீராங்கனை குவோ ஹான்யு (27) இணையுடன் மோதியது. இப்போட்டியில் துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய கேப்ரிலா, எரின் இணை, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

* நேருக்கு நேர்
இகா ஸ்வியடெக் – ஜாஸ்மின் பவோலினி இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவற்றில் 5 முறையும் இகா ஸ்வியாடெக்கே வெற்றிப் பெற்றுள்ளார். இந்த 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களி்ல் இகா நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி உள்ளார். முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனையான இகா இந்த ஆட்டத்தில் வெல்வதன் மூலம் அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியை உற்சாகமாக தொடங்க ஏதுவாக அமையும்.

Tags : Ika ,Cincinnati Open ,Jasmine ,Cincinnati ,Jasmine Paolini ,Ika Swiatek ,United States… ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...