×

அவினாசி சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

கோவை, ஆக. 12: கோவை அவினாசி சாலையில் தொடரும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டுனர்கள் அவதியடைந்து வருகின்றனர். கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,621.30 கோடி மதிப்பில் 10.01 கிமீ தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டுமான பணி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலத்தில், வாகன ஓட்டுனர்களின் வசதிக்காக ஹோப் காலேஜ், நவஇந்தியா, அண்ணா சிலை, விமான நிலையம் ஆகிய 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் (விங்ஸ்) அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வரும் இப்பாலம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கோவை மாநகரில், அவினாசி ரோடு மிக முக்கியமான வழித்தடமாக இருக்கிறது. தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள், மற்றும் திருப்பூர், ஈரோடு போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்துகிறார்கள். தற்போது, இப்பகுதியில் மேம்பாலம் பணி நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இச்சாலையில் சாலைவிபத்தை கட்டுப்படுத்த போலீசார் பல இடங்களில் ‘யூ டர்ன்’ முறையை அமல்படுத்தி உள்ளனர்.

இதன்காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, நவஇந்தியா முதல் பீளமேடு விமான நிலையம் வரை தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடும் நெரிசல் காரணமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையை கடக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்பட பல தரப்பினரும் அவதியுறுகின்றனர். குறிப்பாக, காலை, மாலை பீக் ஹவர் நேரங்களில் அவிநாசி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவினாசி ரோடு மேம்பாலம் பணிகள் தற்போது 96 சதவீதம் முடிந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம், பாலம் திறக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Avinashi Road ,Coimbatore ,Uppilipalayam ,Goldwins ,
× RELATED மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடல்...