பெ.நா.பாளையம், மார்ச் 18: துடியலூர் என்ஜிஜிஓ காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாகனங்களில் பயணிக்கின்றனர். கோவை துடியலூரில் இருந்து இடிகரை செல்லும் சாலை என்ஜிஜிஓ காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2024 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் துவங்கியது. ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து ரூ.32 கோடியில் 980 மீட்டர் தூரம் பாலம் கட்டட தொடங்கப்பட்ட பணிகள், படிப்படியாக வேகம் எடுத்து தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேம்பாலத்தின் இரண்டு புறமும் தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் என்ஜிஜிஓ காலனி நால்ரோட்டில் மூன்று பகுதிகளிலும் சர்வீஸ் சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து சத்தியமங்கலம் சாலை செல்லக்கூடிய இணைப்பு உள்ளது. கனரக வாகனங்கள் செல்வதற்கும் வசதியாக பாலம் கட்டப்பட்டுள்ளது.
