3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!!

சென்னை: மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் தவறுகளுக்காக மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்ததுடன் சட்டப் பிரிவுகளின் எண்களையும் மாற்றம் செய்துள்ளது. இந்தச் சட்டங்களின் பல பிரிவுகளுக்கு வழக்கறிஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்; ஒன்றிய அரசு பாரதீய நியாய சங்ஹிதா என்ற புதிய தண்டனைச் சட்டத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்தியுள்ளது. 2019 மருத்துவ கமிஷன் சட்டத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு இச்சட்டத்தின்படி சிறை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனாவின்போது, சேவை வழங்கிய மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர் என்பது உங்களுக்கு மறந்துவிட்டதா? என்றும், எதிர்பாராமல் சில நிகழ்வுகள் ஏற்படும்போது, மருத்துவர்களை பொறுப்பாக்கி சிறை வழங்குவதுதான் நோக்கமா? என்று கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 4 லட்சம் உறுப்பினர்களை கொண்ட இந்திய மருத்துவர்கள் சங்கம் புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சேவையாற்றும் மருத்துவர்களின் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது இந்த சட்டம். புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டப்பிரிவை சரிசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post 3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: