ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் தொடர் கனமழை; ஏலகிரி மலை சாலையில் பாறைகள் சரிந்து விழுந்தது

ஜோலார்பேட்டை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 436.5 மி.மீ மழை பொழிந்தது. இதற்கிடையே திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை மூலமாக வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ளும் வகையில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மணல் மூட்டைகள், பொக்லைன், மரம் அறுக்கும் கருவி உள்ளிட்ட உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் திருப்பத்தூர்- புதுப்பேட்டை மெயின் ரோடு, ஜெயப்புரம் கூட்ரோடு அருகே சாலை ஓரத்தில் இருந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.

பின்னர் தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதேபோன்று ஏலகிரி மலையில் உள்ள 3வது மற்றும் 4வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே மழையின் காரணமாக பாறைகள் சரிந்து சாலைகளில் உருண்டு போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்தது. இதனை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சாலையில் விழுந்து கிடந்த பாறை கற்களை அகற்றினர். மேலும் மழைக்காலங்களில் இது போன்று பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி தெரிவித்துள்ளார்.

The post ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் தொடர் கனமழை; ஏலகிரி மலை சாலையில் பாறைகள் சரிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Related Stories: