பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை

சென்னை: கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொக்லைன் இயந்திரம் மூலம் கூவம் ஆற்றில் இருந்த கட்டிட கழிவுகளை அகற்றி வருகிறது. சென்னை துறைமுகம் – மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில், 20 கி.மீ. தொலைவுக்கு ₹5,800 கோடி மதிப்பில் ஈரடுக்கு அதிவிரைவு மேம்பால சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதியாக கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணிகளுக்காக கூவம் ஆற்றின் குறுக்கே 13 இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட கழிவுகளால் பருவமழை காலத்தில் இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்படும் என்றும், இதனால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக கருதப்பட்டது. இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அகற்ற வேண்டும். அக்டோபர் 1ம் தேதி நீர்வள ஆதாரத் துறை இதனை முறையாக ஆய்வு செய்து, கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் பல இடங்களில் அகற்றப்படவே இல்லை என்று கூறினார். ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் 67 சதவீத இடங்களில் கழிவுகள் அகற்றப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த அமர்வின் உறுப்பினர்கள், 4ம் தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தாததற்காக அபராதம் விதிக்கப்படும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து கூவம் ஆற்றில் கொட்டப்பட்டிருந்த குறிப்பாக எழும்பூரைச் சுற்றியுள்ள கூவம் ஆற்றுப் பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் ஒரு சில பகுதிகளில் மட்டும் இன்னும் கட்டிட கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. அந்தக் கழிவுகளும் விரைவில் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: