நெல்லை மாநகர பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் உயிர்ப்பலி விபத்துக்கள் அதிகரிப்பு

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெல்லை நெல்லை மாநகர பகுதிகளில் சாலையில் கட்டுக்கடங்காது சுற்றித்திரியும் கால்நடைகளால் பல்வேறு உயிர்பலி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவற்றை பிடித்து மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகரப்பகுதிகளில் கடந்த பல மாதங்களாக சுற்றித்திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்துக்கொண்டே வருகிறது. இந்த கால்நடைகளால் கடந்த சில மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

குறிப்பாக நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் மட்டும் 3 விபத்துகள் மாடுகளால் நடந்து 3 பேர் பலியாகியுள்ளனர். இப்பகுதியில் நேற்று முன் தினம் கொடூரமாக பாய்ந்த மாடு முட்டி தாக்கியதில் மொபட்டில் சென்ற கோர்ட் ஊழியர், அரசு பஸ் மோதி பலியானார்.நெல்லை மாநகரப்பகுதிகளில் டவுன் காட்சிமண்டபம் முதல் சந்திப்பிள்ளையார் கோவில் வரையுள்ள சாலைகள், 4 ரதவீதிகள், நயினார்குளம் ரோடு பகுதிகள், டவுன் தெப்பக்குளம் சுற்றுபகுதிகள், பாளை சித்தாகல்லூரி அருகேயுள்ள பகுதிகள், புதிய பஸ்நிலையத்தின் பின் பகுதிகள், வஉசி மைதானம் சுற்றுப்பகுதி, பாளை மார்க்கெட் பகுதிகள், வடக்கு பைபாஸ் சாலை, தச்சநல்லூர் என பல்வேறு பகுதிகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிகமாக சுற்றித்தரிகின்றன. இவை சாலைகளில் திடீர் திடீரென குறுக்கும் நெடுக்குமாக உலாவருகின்றன.

பல நேரங்களில் மாடுகள் ஒன்றுக்கொன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொண்டு சாலைகளில் ஓடி வருவதால் பாதசாரிகள், டூவீலர் ஓட்டுபவர்கள், ஆட்டோக்கள் என அவை எதிரே வருபவர்கள் மீது மோதுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து சாலையில் விழவும் நேரிடுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக உயிர்பலி ஏற்பட்டு வருவது தொடர்கிறது.

பாளையில் பள்ளிகள் உள்ள பல இடங்களில் கால்நடைகள் மாணவ-மாணவியருக்கு மத்தியில் உலாவருகிறது. சிலநேரங்களில் அவர்களை பயமுறுத்தும் விதமாக பாய்ந்து வரும் மாடுகளை கண்டு மாணவ-மாணவியர் சிதறி ஓடும் நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள். கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்டவர்கள் இணைந்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை லாவகமாக பிடித்து பவுண்டுகளில் அடைக்க வேண்டும். மேலும் தாங்கள் வளர்க்கும் மாடுகளை கட்டி வைத்து வளர்க்காமல் அலட்சியமாக தெருக்களில் சுற்றித்திரியவிடும் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்தல், அதிகமான அபராதம் விதித்தல், கால்நடைகளை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாடுகள் பிடிக்கும் பணி தீவிரம்

நெல்லை : மேலப்பாளையம் மண்டலத்தில் சாலைகளில் சுற்றி திரிந்த 12 மாடுகள் பிடிபட்டன.நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர் தாணுமூர்த்தி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின்படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் சந்திரமோகன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 12 மாடுகள் பிடிக்கப்பட்டன. மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post நெல்லை மாநகர பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் உயிர்ப்பலி விபத்துக்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: