முன்னால் சுமப்பது யார்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நாராயண பூதம்! இவன் ஒரு பிரம்ம ராட்சசன்; மகா மேதாவி. யாராவது வித்துவான், பண்டிதர் என்று சொல்லிக் கொண்டால் போதும்; தோன்றினால் போதும். அவர்களை இந்த நாராயண பூதம், வாதப்போட்டிக்கு அழைக்கும். நாராயண பூதத்தை வென்றவர்கள் யாருமில்லை. தோற்றவர்களைக் கொன்று விடும் நாராயண பூதம். ஒரு சமயம்… ஸ்ரீவாதிராஜ சுவாமிகளிடம் (உடுப்பி சோதே மடம்) சென்ற நாராயணபூதம், அவரை வாதப்போட்டிக்கு அழைத்து சவால் விட்டது. சுவாமிகளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நாராயண பூதம் கேட்பதாக இல்லை.

‘‘சரி! கேள்!’’ என்றார் சுவாமிகள்.

‘‘ஆகாமாவை என்றால் என்ன?’’

என்று கேட்டது நாராயண பூதம்.

சுவாமிகள் பதில் சொல்லத் தொடங்கினார்; ‘‘ஆகாமாவை-என்பதில் உள்ள ‘ஆ’ என்பது ஆஷாட மாதத்தை, ஆடி மாதத்தைக் குறிக்கும். ‘கா’ என்பது கார்த்தீக-கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். ‘மா’ என்பது மாக-மாசி மாதத்தைக் குறிக்கும். ‘வை’என்பது வைசாக-வைகாச மாதத்தைக் குறிக்கும். இந்த மாதங்களில் பௌர்ணமி அன்று நீராடி, பகவானுக்கு விசேட பூஜைகள் செய்ய வேண்டும்’’ என்று விரிவாகச்சொல்லிச் சிறப்பையும் விளக்கினார்.

நாராயண பூதம் வியந்து, சுவாமிகளைச் சரண் அடைந்தது; அன்று முதல் ஒரு பணியையும் மேற்கொண்டது. சுவாமிகள் பல்லாக்கில் பயணம் செய்யும்போது, யார் கண்களிலும் படாதவாறு, பல்லாக்கின் முன்புறத்தைச் சுமந்து சென்றது. பல்லாக்கின் பின் பகுதியை மட்டும் மடத்து சிப்பந்திகள் சுமந்து செல்வார்கள்.முன் பக்கத்தில் சுமக்கும் ஆட்களே இல்லாமல், பின் பக்கம் மட்டும் சுமக்கும் ஆட்களைப் பார்த்த அனைவரும் வியந்தார்கள்.

‘‘சுவாமிகள் பயணம் செய்யும் பல்லாக்கு முன்பக்கம் அந்தரத்தில் இருக்க, பின்பக்கம் மட்டும் ஆட்கள் சுமந்து செல்கிறார்கள். அதிசயம்! அதிசயம்!’’ என்று வாய்விட்டுப் பேசவும் செய்தார்கள். ஸ்ரீவாதிராஜ சுவாமிகளின் காலம் 1480-1600 என்பார்கள். ஆகாமாவை- என்று பஞ்சாங்கங்களில் போட்டிருக்கும். அதன் விளக்கம் இதுவே!

தொகுப்பு: V. R. சுந்தரி

The post முன்னால் சுமப்பது யார்? appeared first on Dinakaran.

Related Stories: