நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை உணர்த்திய மகான்

ஸ்ரீபோதேந்திர சுவாமிகள் ஆராதனை – 29.9.2024

‘‘நாமசங்கீர்த்தனம், பஜனை சம்பிரதாயத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர்!’’ தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரை அடுத்து, கும்பகோணம் மயிலாடுதுறை பிரதான சாலையில் அமைந்திருக்கிறது கோவிந்தபுரம். ‘பகவத் மகிமை’ நிறைந்த அந்த ஊரில் போதேந்திரருக்கு ஜீவ சமாதி அமைந்திருப்பதும், ஆண்டுதோறும் நாம சங்கீர்த்தனமும் மற்றும் பல விழாக்களும் நடை பெறுவதும் கோவிந்தபுரத்தைக் கோலாகலபுரியாக்கி வைத்திருக்கிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆச்சார்ய பரம்பரையில் 59-வது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ பகவந் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது காலம் கி.பி.1638-1692. நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம். பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நாம ஜபத்தின் மேன்மையை பல இடங்களிலும் சொல்லி இந்த எளிய வழிபாட்டை மேம்படுத்தினார்.

ஒரு மடாதிபதியாக காஞ்சிபுரம் மடத்தில் இவர் தங்கியிருந்த காலத்தைவிட, வெளியில் பயணித்து நாம ஜப மேண்மையைப் பரப்பிய காலமே அதிகம். ‘நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு’ என்று போற்றப்படுபவர் இவர். ஆதிசங்கரர் அத்வைதக் கிரந்தம் செய்தது போலவே, இவரும் பகவான் நாம சித்தாந்தம் செய்து பாமர மக்களும் பாடும்படி செய்தவர்.

ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதாரத்தைப் பார்ப்போம் பலநூறு ஆண்டுகளுக்கு முன், புராணம் போற்றும் புண்ணிய நகராம் காஞ்சிபுரத்தில் மண்டன மிஸ்ரர் அக்ரஹாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்க யோகி. ஆந்திர பிராமண குலத்தைச் சார்ந்தவர். இவர் மனைவியின் பெயர் சுகுணா. இந்தத் தம்பதிக்கு கி.பி.1638-ஆம் ஆண்டில் ஆதிசங்கர பகவத் பாதரின் அம்சமாக ஸ்ரீ போதேந்திரர் அவதரித்தார். பூர்வாசிரமத்தில் ‘புருஷோத்தமன்’ என்று பெயர்.

அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58-வது பீடாதி பதியாக விளங்கியவர் ஆத்ம போதேந்திரர் என்கிற ‘விஸ்வாதி கேந்திர சரஸ்வதி சுவாமிகள்.’ இவரிடம் உதவியாளராக இருந்து வந்தார் கேசவ பாண்டுரங்க யோகி. ஒரு நாள் இவர் மடத்துக்குப் போகும் போது, ‘நானும் வருவேன்’ என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான
புருஷோத்தமன்.

அவனையும் அழைத்துக்கொண்டு காஞ்சி ஸ்ரீ மடத்துக்கு வந்து சேர்ந்தார் பாண்டுரங்கர். பீடத்தில் அமர்ந்திருந்த சுவாமிகளைக் கண்டதும் பக்தி உணர்வு மேலிட, எவரும் சொல்லாமல் தானாகவே இருகரம் குவித்து நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன். இதைக் கண்ட அனைவரும் ஆச்சர்யப்பட்டனர் பாலகனின் தேஜஸ்கண்டு மயங்கினார் சுவாமிகள். இந்த குழந்தை எமக்கு வேண்டும்பாண்டுரங்கரைப் பார்த்து, ‘இந்தக் குழந்தை யாருடையது’ என்று பீடாதிபதி சுவாமிகள் கேட்டார். ‘சுவாமி, தங்களது பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதே!’’ என்றார் தந்தை இயல்பாக. உடனே சுவாமி, ‘நம்முடையது என்று நீர் சொல்வதால், இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா?’ என்று சுவாமிகள் கேட்க, அடுத்ததாக யதேச்சையாக ‘தான் சொன்ன வார்த்தைகளின் முழுப் பொருள் அப்போதுதான் பாண்டுரங்கருக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார். வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்து விட்டோமோ என்று ஐயப்பட்டார். இருந்தாலும், வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் சங்கல்பத்தால் எழுந்தவையாக இருக்கும் என்று அனுமானித்தார்.

உடனே சுவாமிகளைப் பணிந்து, ‘‘சுவாமி, தங்கள் விருப்பமே எனது விருப்பமும்’ என்றார். இதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்ட சுவாமிகள், ‘நல்லது இன்றைய தினத்தில் இருந்து ஸ்ரீ மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான். தைரியமாகச் செல்லுங்கள்!’ என்றார். கணவரின் இந்த செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா சிறிதும் கலங்கவில்லை. ‘பகவானின் விருப்பம் அதுவானால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?’ என்று தன்னையே தேற்றிக் கொண்டு கணவரையும் தேற்றினாள்.

வேத வேதாந்தத்தை கற்ற புருஷோத்தமன்

ஐந்து வயதில் அட்சர அப்பியாசம். ஏழு வயதில் உபநயனம்; பதினாறு வயது முடிவதற்குள் வேதம் வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்றுத் தேர்ந்தான் புருஷோத்தமன்.  ‘அனைத்திலும் உயர்ந்தது ‘ராம நாமமே’ என்று தெளிந்த புருஷோத்தமன்,’ தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ‘ராம’ நாமத்தை ஜபிப்பதாக ஆச்சார்யர் முன் அமர்ந்து சங்கல்பமே எடுத்துக் கொண்டான். இதைத் தவறாமல் கடைப் பிடித்தும் வந்தார். நாளாக ஆக புருஷோத்தமனின் தேஜஸூம், பவ்யமும் கூடிக் கொண்டே வந்தது. ஆச்சார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார், பீடாதிபதி விஸ்வாதி கேந்த்ரர். அவனை பீடத்தில் அமர்த்திப் பார்த்து அழகு செய்ய விரும்பினார் சுவாமிகள்.

பட்டத்தை ஏற்றுக்கொண்டார்

ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ மடத்தின் 59-வது பீடாதிபதியாக ஆக்கினார் சுவாமிகள். அப்போது புருஷோத்தமனுக்கு சுவாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே, ‘ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள்.’ அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் ஸ்ரீ போதேந்திரர். ‘நாம கவுமாதி’யை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நாம சங்கீர்த்தனத்தை வகைப்படுத்தி சுவாமிகள் எட்டுப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவை யாவும் கிரந்தங்களின் அடிப்படையில் அமைந்தவை. புராணங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும் மேற்கோள் எடுத்துக் காட்டி, நாடு முழுவதும் ராம சங்கீர்த்தனத்தின் புகழை எடுத்துக் கூறினார்.

வெவ்வேறு ஊர்களில் நடக்கும் போதேந்திரரின் ‘நாம ஜப’ உற்சவங்களுக்குப் பெருமளவில் பக்தர்கள் வர ஆரம்பித்தார்கள். நாமசங்கீர்த்தனமே முதன்மையானது
காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதி பதியாக விளங்கிய போதேந்திர சரஸ்வதி சுவாமிகள், தனது மடாதிபதி பதவியையும் துறந்து, ஊர்ஊராகச் சஞ்சாரம் செய்து பக்தி மார்க்கத்தைப் பரப்பி வந்தார். கலியுக மக்களுக்கு கடவுளின் நினைவு வர அவர்களைச் சுலபமான மார்க்கத்தில் இட்டுச் செல்லக் கூடியது நாம சங்கீர்த்தனம்தான் என்று உரக்கக் குரல் கொடுத்தார். அந்தக் குரல் ஏராளமான நாம சங்கீர்த்தனங்கள் இயற்றக் காரணமாயிற்று. நாம ஸ்மரணையைக் கேட்பதில் இருக்கும் ஆனந்தம் கேட்டு அனுபவித்தால்தான் அதன் இனிமை
புரியும்.

குண சங்கீர்த்தனம் – பகவானுடைய கல்யாணக் குணங்களைப் பாடி, அத்தகைய குணங்களை நாமும் பெற வைராக்கியம் கொள்ளுதல்.லீலா சங்கீர்த்தனம் – பகவானின் பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு அவதாரங்களில் புரிந்த பல லீலா விநோதங்களையும், நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சிகளையும் பாடி அவரது சர்வ வல்லமையை எண்ணி மகிழ்தல். பாவ சங்கீர்த்தனம் – சாந்த பாவம், சாக்ய பாவம், தாஸ்ய பாவம், வாத்ஸல்ய பாவம், அனுராக பாவம், மதுர பாவம் ஆகிய ஆறு வகை பக்தி பாவத்துடன் இறை வனின் நாமத்தை இடையறாது உச்சரித்தல் அல்லது அவர் புகழ்பாடுதல்.

நாம சங்கீர்த்தனம் – குழுவாகச் சேர்ந்து, பஜனை செய்தல், நகர சங்கீர்த்தனம் செய்தல் போன்றவை இது தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் பலன் தரவல்ல பொது தெய்வ வழிபாடு. இது பாடுபவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் புண்ணியத்தைச் சேர்க்க வல்லது. பகவான் நாமாக்களை தொடர்ந்து ஜெபிப்பது.

ஸ்ரீ போதேந்திர சுவாமிகளின் உபதேசம்

* ‘‘கலியுகத்தில் மனிதர்களின் பெரும்பாலான கர்மங்களும், தொழில்களும் ராஜசீகமாக நடக்கின்றன. அந்த நிலையில் தியானம், யக்ஞம், அர்ச்சனை போன்ற சாதனைகளை எல்லோரும் மேற்கொள்ளுவது கடினம். எனவே எல்லோரும் ஏற்றுக் கொண்டு, செயலாற்றக்கூடிய எளிய பிரார்த்தனை மார்க்கம், சுலபமான யோக சாதனை, நாமஸ்மரணையும் நாம சங்கீர்த்தனமுமாகும்.’’

* ‘‘வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். நடக்கின்ற பாதையோ, கல்லும் முள்ளும் நிறைந்தது. இந்த பயணத்தின் போது, கடவுள் நாமத்தை, நாவால் உச்சரிக்கும் போது, தாகம் ஏற்படுவதில்லை. இதயத்தில் அவர் ரூப லாவண்யங்களைப் பதித்துக் கொள்ளும் போது, களைப்பு ஏற்படுவதில்லை. நமக்குள்ளேயே உள்ள கடவுள் நமக்கு மிக அருகிலேயே நம்மோடு பயணத்தில் நடந்து வந்து கொண்டிருக்கின்றான், என உணரும் போது, பயம் நீங்கி, உடல் சோர்வு நீங்கி, புதிய வலிமை பிறக்கிறது.’’

* ‘‘நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வ பாப பிரணாசனம்’’ என்ற வாக்கியங்களால் கலியுகத்தில், சகல பாபங்களையும் போக்கி, புண்ணியத்தைத் தரவல்லது. நாம சங்கீர்த்தனம் ஒன்றுதான் என்று ஆன்றோர்களும் மகான்களும் வலியுறுத்தியுள்ளனர்.!’’

*‘‘நாமஸ்மரணம் அல்லது நாமசங்கீர்த் தனம் என்பது உலகத் தோரால் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு ஆன்மிக சாதனை. ஒன்றாகிய பரம் பொருளை பல்வேறு பெயர்களில், பல்வேறு மொழிகளில், இசை வடிவில் அழைத்து, அருள் வேண்டுவதே, நாம சங்கீர்த்தனம்.’’

* ‘‘இறைவனுக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான நாமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு ரூப மாதுர்யமும், குண விசேஷமும் அனுக்கிரகத் தத்துவமும் உண்டு. அதைத் திரும்பத் திரும்ப நாம ஸ்மரணையாகவோ, நாம சங்கீர்த்தனமாகவோ கூறும் பொழுது, உள்ளே இழுக்கும். மூச்சுக் காற்றிலும் பிராணவாயு தெய்வீகத்தன்மை பெற்று, உன்னத சக்தியாக மாறுகிறது. துர்க்குணங்களும், துன்மார்க்க எண்ணங்களும் வெளிவிடும் காற்றில் வெளியேறி, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது.

* ‘‘கலியுகத்தில் மோட்சத்தை அடைய எளிய சாதனை, நாம சங்கீர்த்தனம்தான்’ என நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. கலியுகத்தில் தொடர்ந்து வரும் பல்வேறு வாழ்க்கைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, நாம சங்கீர்த்தனமும் ஒரு மார்க்கமாகும்.

‘‘விக்ஞான – வைராக்ய பராத்ம பக்தி
சமாதிபிர் யோ திகதாம் – ப்ரபன்ன
விச்வாதிகாக்ய மகமச்ச தேன
குரூத்தமம் தம் ப்ரண மாமி மூர்த்நா!’’

அதாவது விஞ்ஞானம், வைராக்கியம், ஹரிபக்தி இவைகளால் எவர் வைராக்கியத்திற்கு அதிபராக ஆனாரோ, அந்த குரு தேவரை வணங்குகிறேன் என்பது இச் ஸ்லோகத்தின் பொருள்.’’ இப்படியெல்லாம் போதேந்திரர் சுவாமிகள் நாம சங்கீர்த்தனத்தில் மேன்மையை அறிவித்தும், தம் குருபக்தியையும் வெளிப்படுத்திக் கொண்டார்.

ஸ்ரீ போதேந்திர சுவாமிகளின் ஆராதனை

கோவிந்தபுரத்தில் பக்திப் பெருக்கோடு இவர் வாழ்ந்து வந்த வரலாற்றின் சாரம் இது தான்! சாதனையும் இதுதான்! கோவிந்தபுரத்தில் போதேந்திர சுவாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி!

ஆற்றங்கரை மணலுக்குள் சுவாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692-ம் ஆண்டு (பிரஜோத்பத்தி) புரட்டாசி மாதம் பௌர்ணமி திதியில் நடந்தது. இப்போதும் சுவாமிகளின் அதிஷ்டானத்தில் பௌர்ணமியில் ஆரம்பித்து, மகாளய அமாவாசை வரை 15-நாட்கள் ஆராதனை உற்சவம் பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாரதநாட்டிலும் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பாகவதர்களும் வந்து கூடுகிறார்கள். இவர் ஜீவன் முக்தி அடைந்துள்ள சமாதியைச் சுற்றி காவி உடை அணிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்மீது துளசி செடி வளர்ந்திருக்கிறது. சமாதியின் முகப்பின் மீது அமைக்கப்பட்டுள்ள சுவாமிகளின் முகத்தின் மீது ஏராளமான மலர் மாலைகளைச் சூட்டியிருக்கிறார்கள். சமாதிக்கு அடியில் சுவாமிகளின் உற்சவ விக்கிரகம், அதன்மீது ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. பூஜைக்குரிய ஏராளமான மலர்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

பாகவத சிரோன்மணிகளும் பக்தர்களும் பக்தி மேலிட ‘ராம், ராம்’ என்று சொல்லிக்கொண்டே சமாதியைச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறார்கள். சிலர் சலவைக்கல் தரையில் ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டு ‘ராம நாமம்’ எழுதுகிறார்கள். சுவர்களைச் சுற்றி ஆதிசங்கரர், ஞானேஸ்வரர், மீராபாய், சூர்தாஸ், ஜெய தேவர், கபீர்தாசர், நாராயண தீர்த்தர் ஆகிய பக்தர்களின் வண்ணப்படங்கள் அலங்கரிக்கின்றன. விழா நாட்களில் நாள் முழுவதும் பல விதமான பஜனைகளும் சத்கதா காலட்சேபங்களும் நடக்கின்றன. இசைக் கருவிகளின் ஓசை கோவிந்த புரத்யே கலக்குகின்றன. பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சந்நதி, போதேந்திர சுவாமிகளின் அதிஷ்டானம் இவை இரண்டும்தான் இங்கே பிரதானம்.

உயரமான தூண்கள் கொண்ட அழகிய மண்டபத்தின் நடுவே அதிஷ்டானம் அமைந்துள்ளது. இதைச் சுற்றி வலம் வரலாம். கிழக்கு நோக்கிய படி அதிஷ்டானத்தில் பிரதான வாயில். மூன்று நிலை ராஜ கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நித்ய பூஜை, வழிபாடு, அன்னதானம் என்று எதற்கும் குறைவில்லை. தினமும் காலை 6 மணிக்கு சுப்ரபாதசேவை, 8 மணிக்கு உஞ்சவிருத்தி, 9-மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேகம், 11-மணிக்கு அதீஷ்டான பூஜை, அதன் பிறகு அடியார்களுக்கு சமாராதனை.

பக்தர்களுக்கு அன்னதானம். பின்னர் மாலை 4 மணிக்கு சம்பிரதாய பூஜை, 6-மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், 7 மணிக்கு அதிஷ்டான பூஜை, ஏழரை மணிக்கு டோலோற்சவம் இதுதான் போதேந்திர சுவாமிகளின் அதிஷ்டானத்தின் நித்யப்படி வழிபாடு. கோவிந்தபுரத்தில் நிறைய பசுக்களை வைத்து கோ-சாலையும் பெரிய அளவில் பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பால் அதிஷ்டானத்தின் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியின் அர்த்த ஜாமப்பூஜைக்கும் செல்கிறது.

‘‘கலியில் நாம சங்கீர்த்தனம்தான் கதி. நமக்கு பக்தி இல்லாவிட்டாலும், ஞானம் இல்லாவிட்டாலும், விரக்தி இல்லாவிட்டாலும், கர்ம யோகம் இல்லாவிட்டாலும், சிரத்தை இல்லாவிட்டாலும், தபஸ் இல்லாவிட்டாலும், நன்னடத்தை இல்லாவிட்டாலும், சக்தி இல்லாவிட்டாலும், இப்படி எது இல்லாவிட்டாலும் அதற்குக் காரணம் நம்மிடம் ‘நாம ஜபம் போதவில்லை’ என்பதே ஆகும்!

ஏனெனில் ‘நாம ஜபம்’ பூரணமாக இருந்தால் மேற்சொன்ன யாவும் நம்மிடம் இருக்கும்!’’ என்ற போதேந்திர சுவாமி களின் இந்த உபதேசத்தை அதிஷ்டான ஆலயத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்! நாம ஜபத்தில் பேதமில்லை. அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தமான நாமாவை ஜபம் செய்து வரலாம். இதற்கு விதிகளும் நியமமும் இல்லை. குரு இல்லை. ஆசாரம் இல்லை. அனுஷ்டானமும் இல்லை. பூஜையறைதான் வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. எந்த சந்தர்ப்பத்திலும், எத்தகைய நிலையிலும் ஆசாரம் குறைவாக இருந்தாலும், ஆண் பெண் ஆகிய எந்தப் பிரிவினரும் தங்களுக்கு வசதியான நேரங்களில் பகவான் நாமாவை ஜபித்துக்கொண்டே இருக்கலாம். இதற்கான புண்ணியமும் பலனும் வார்த்தைகளில் வடிக்க இயலாதவை.

நாள்தோறும் ஏராளமான மக்கள் கோவிந்தபுரம் வருகிறார்கள். போதேந்திர சுவாமிகளை அறிந்துகொள்ள கோவிந்தபுரம் வந்து அவர் பெருமைகளை அறிந்து, ஆராதனை விழாவில் கலந்துகொண்டு, தரிசனம் கண்டு திரும்புகிறார்கள். சுவாமி களின் ஜீவ சமாதியைவிட்டு வெளியே வரும் போது, காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரு ஸ்லோகம்.

‘‘ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம்
ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம்
லோக சங்கரம்!’’

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை உணர்த்திய மகான் appeared first on Dinakaran.

Related Stories: