* இறைவர்: திரிபுராந்தகேஸ்வரர்; திருவிற்கோலநாதர். சிவபெருமான் திரிபுர சங்காரத்தின் போது, மேரு மலையை வில்லாகக் கையில் பிடித்த சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலம்.
இறைவி: திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி.
* தல விருட்சம்: தனியாக ஏதுமில்லை. தலமே நைமிசாரண்ய சேத்திரம் எனப்படுகிறது.
* தீர்த்தம்: அக்கினி தீர்த்தம், கோயிலுக்கு எதிரில் உள்ளது. அச்சிறுகேணி என்றும், கூபாக்கினி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீர்த்தத்தில் தவளைகள் இருப்பது இல்லை. சுற்றிலும் வயல் வெளிகள் இருந்தும், இத்தீர்த்தத்தில் தவளைகள் இல்லை. பிடித்துக் கொண்டு வந்துவிட்டாலும், அத்தவளைகள் வெளியேறிவிடுமாம்.
* அச்சிறுகேணிப் பெருமை – 1:
“வந்து அதனில் இரு நான்கு பகல் மூழ்கின்
வரல் முறையால் ஒவ்வோர் வைகற்கு
அந்தம் அறும் பவம் போம் புண்ணியம் வளரும்
மகபதி தன் அரிய தானம்
முந்து பிரசாபதின் தானம் அயன்
உறு தானம் முகுந்தன் தானம்
எந்தை உமை ஒரு பாகன் இருந்தானம்
முக்தி இவை எய்தும் அன்றே’’
(கூவம் – திருவிற்கோலம் தல புராணம்)
கருத்து: இந்தத் தீர்த்தத்தில் வந்து எட்டு நாட்கள் பகலில் நீராடினால், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என ஸ்தல புராணம் கூறுகிறது.
ஒரு நாள் நீராடினால்: முடிவற்ற பிறவி நீங்கும்.
இரு நாட்கள் நீராடினால்: புண்ணியம் வளரும்.
மூன்று நாட்கள் நீராடினால்: இந்திரப்பதவி கிடைக்கும்.
நான்கு நாட்கள் நீராடினால்: சூரியன் பதவி கிடைக்கும்.
ஐந்து நாட்கள் நீராடினால்: பிரம்மலோகமான சத்திய உலகம் கிடைக்கும்.
ஆறு நாட்கள் நீராடினால்: திருமாலின் வைகுண்டம் கிட்டும்.
ஏழு நாட்கள் நீராடினால்: உமையொரு பாகனின் சிவலோகம் கிடைக்கும்.
எட்டு நாட்கள் நீராடினால்: முக்தி கிட்டும்.
* அச்சிறு கேணிப்பெருமை – 2:
“செங்கதிர் வெண்கதிர் நாள் அட்டமி அயனம்
உவா ஆதி தினங்கள் நண்ணி
அங்கு அதனில் ஆடுநர்கள் அரும் புதல்வர்
அரசாட்சி ஆக்கம் எய்தித்
தங்கி இரும் கதி அடைவர்; அதில் தோய்ந்து
போம் பறவை சார்ந்த வாவிப்
பொங்கு புனல் படிந்தவரும் வினை தீர்ந்து
மெய்க்கதியில் புகுவர் அன்றே’’
(கூவம் – திருவிற்கோலம் தல புராணம்)
கருத்து: சூரியனின் நாளான ஞாயிற்றுக்கிழமை; சந்திரனின் நாளான திங்கட்கிழமை; அஷ்டமி தினங்கள்; உத்தராயண – தட்சிணாயண புண்ணிய காலங்கள்; பௌர்ணமி-அமாவாசை ஆகியநாட்கள்; முதலான தினங்களில் அங்கு சென்று அங்கே அத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், அரும் புதல்வர்கள், அரசாட்சி, செல்வம் ஆகியவற்றை அடைந்து, இவ் வுலகில் நீண்டகாலம் இருந்து, உயர் கதியை அடைவார்கள்; வினைகள் தீரும்.
* சந்தன மேடை: துர்கை சந்நதி எதிரில் சந்தன மேடை உள்ளது. இதில் அரைத்த சந்தனத்தைத் தான் ஸ்வாமிக்குச் சாற்றுகிறார்கள்.
* பைரவர் சந்நதி தனிக் கோயிலாக உள்ளது. வழக்கப்படி பைரவர் சந்நதியில் இருக்கும் நாய் இங்கு இல்லை. காரணம்; திரிபுர சங்காரத்தின் போது, பைரவர் சென்று தேவர்கள் எல்லோரையும் அழைத்து வந்தார். அப்போது நாய் வழிதவறிவிட்டதால், இங்கு பைரவர் சந்நதியில் நாயில்லை.
* இங்குள்ள சோமாஸ்கந்தர், ஆறுமுகர், சந்திர சேகரர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, சுக்கிர வார அம்பாள், பிரதோஷ நாயகர், பிட்சாடனர், பூதகணம், மான், துர்கை, லட்சுமி, சரஸ்வதி, நால்வர் ஆகிய விக்கிரகங்கள் மிகுந்த அழகு வாய்ந்தவை.
* மூலவர், கிழக்கு நோக்கிய சந்நதி. தீண்டாத்திருமேனியர். மேலே செப்பு மண்டபம். நடுவில் ருத்ராட்ச விமானம், சுற்றி உள்ள பத்து ஊர்களுக்கு, இந்த ஸ்வாமிதான்
குல தெய்வம்.
* மண்ணால் ஆன லிங்கம் என்பதால், கும்பாபிஷேகம் நடக்கும் போது, பாலாலயம் செய்யும் வழக்கம் இல்லை. பதினாறு முழ வேட்டிதான் இங்கே சுவாமிக்குச்
சார்த்தப்படுகிறது.
* ஐயன் அதிசயன்: அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால், மூலவர் மீது வெண்மை படரும். போர் வரும் என்றால், மூலவர் மீது, செம்மை படரும். இதன் காரணமாக ‘ஐயன் நல் அதிசயன்’ எனப்பாடுகிறார் திருஞான சம்பந்தர்.
* திருமஞ்சன மேடை: கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள இடம் ‘திருமஞ்சன மேடை’. கூவம் ஆற்றின் கரையில் உள்ளது. அங்கிருந்து தீர்த்தம் கொண்டு வந்துதான், ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இதற்காக ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது தீர்த்தம் கொண்டு வந்து, அபிஷேகம் செய்யப்படுகிறது. அவ்வாறு கொண்டு வருவதில் ஏதாவது தவறு நேர்ந்தால், அதாவது கொண்டு வருபவர் அந்தத் தீர்த்தத்திற்குப் பதிலாக, செல்ல வேண்டிய தூரத்திற்குப் பதிலாக, வேறு தீர்த்தத்தைக் கொண்டு
வந்தால், அதைக் கொண்டு அபிஷேகம் செய்தால், சுவாமி மீது சிற்றெறும்புகள் படரும். அதைப் பார்த்து தவறு நேர்ந்துள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.
* சிவபெருமான், காளிக்கு அருள் செய்வதற்காக, ‘ரட்சா நடனம்’ ஆடிய திருத்தலம் இது.
* சுவாமிக்கு வலது பக்கமாக அம்பாள் சந்நதி உள்ளது. அம்பிகை கிழக்கு நோக்கிய சந்நதியில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார்.
* சிவபெருமான் கூவம் வந்தது: தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் பலகாலம் கடினமான தவம் செய்து, பிரம்மதேவரிடம் இருந்து பல வரங்களைப் பெற்றார்கள்.
தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான மூன்று கோட்டைகள் வேண்டும். பகைவர்களை அழிக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்கள் மூவரும் ஒன்றுசேர வேண்டும். எங்களுக்கு முடிவே வரக் கூடாது. முடிவு நேரத்தான் வேண்டுமானால், நாங்கள் மூவரும் ஒன்று சேரும் வேளையில், ஒன்றான பரம்பொருள் ஒரே அம்பால் எங்களைக் கொல்ல வேண்டும். மற்றபடி வேறு எந்த விதத்திலும் எங்களுக்கு மரணம் வரக்கூடாது என்பதே அவர்கள் பெற்ற வரம். பெற்ற வரங்களின் காரணமாக அந்த மூவரும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார்கள். நல்லவர்களை எல்லாம் படாதபாடு படுத்தி, மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கினார்கள். வறுமையும் பயமும் எங்கும் பரவின. தேவர்களும், முனிவர்களும், சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள்.
‘‘உங்கள் குறை தீர்ப்போம்!’’ என்ற சிவபெருமான், பூதகணங்கள் – தேவர்கள் ஆகியோர் சூழப்புறப் பட்டார். புறப்பட்ட சிவபெருமான் ‘கூவம்’ நகரை
வந்தடைந்தார்.
“பூத நாயகன் கயிலை அம்பொருப்பு விட்டு அலகில்
காதம் ஓர் இறைப் பொழுதினில் கடந்து வந்தருளிச்
சீதவார் பொழில் `கூவம்’ என் திருநகர் அடைந்தான்
பாத தாமரை வணங்கி விண்ணவர் குழாம் பரவ’’
(கூவம் – திருவிற்கோலத் தலபுராணம்)
கூவம் வந்த சிவபெருமானுக்கு, ஓர் அற்புதமான தேர் தயாரானது. (தயாரான இந்தத் தேரைப் பற்றிய தகவல்களைப் புராணங்கள் பலவும், தலபுராணமும் விரிவாகவே கூறுகின்றன. அந்தத் தேரின் ‘கூவரம்’ ஏர்க்கால் முறிந்ததால் ‘கூவரம்’ என அழைக்கப்பட்ட இத்திருத்தலம், பெயர் மருவி ‘கூவம்’ என அழைக்கப்படுகிறது. அவ்வாறு வந்த சிவபெருமான், திரிபுர
அசுரர்கள் சேரும்போது, அவர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்தார். அசுரர்கள் மூவரும் திருந்தினார்கள்; சிவனருளால் சிவபூத கணங்களில் இடம் பெற்றார்கள்.
சான்றோர்கள் நிறைந்தது தொண்டை நன்னாடு, என ஔவையாரால் பாராட்டப்பட்ட தொண்டை நாட்டில் உள்ளது கூவம் என்னும் ஊர். கூவம் என்பதற்குக் கிணறு என்பது பொருள். கிணற்றுநீரை வெள்ளம் கொண்டு போகாது என்போமல்லவா? அதுபோல, காலவெள்ளத்தால், கூவத்தின் பெருமை மறைந்து போகாது என்பதை விளக்குகிறது அத்திருத்தலத்தின் பெயர்.
திரிபுர சம்ஹாரம் செய்த இறைவனான சிவபெருமான், ‘திரிபுராந்தகர்’ என்றபெயரில் எழுந்தருளியிருக்கும் திருத்தலம் – கூவம். (திரிபுரசம்ஹாரம் செய்வதற்காக இறைவன் புறப்பட்டபோது, அவரது தேரின் கூவரம் சிதைந்த இடம். இது, கூவரம் என்பதே கூவம் என மருவிற்று என்பதும் உண்டு. (கூவரம் – ஏர்க்கால்) கூவம் என்பது தலத்தின் பெயர் திருவிற்கோலம் – என்பது கோயில் பெயர். கோயில் கொண்ட ஸ்வாமியின் திருநாமம் – தீண்டாத்திருமேனி திரிபுராந்தகர். வெள்ளிக் கரண்டி- வெள்ளிக் குறடுகள் ஆகியவற்றைக் கொண்டே சுவாமிக்கு, அபிஷேகங்கள் அலங்காரங்கள் ஆகியவை நடைபெறும். சுவாமியைக் கையால் தீண்ட மாட்டார்கள்.
கோயிலிலிருந்து ஏறத்தாழ 3.கி.மீ. தொலை தூரத்தில் அமைந்திருக்கும் ஆற்றில் இருந்து, குடத்தில் நீரைக் கொண்டு வந்தே அபிஷேகம் நடக்கிறது. கோயிலைச் சார்ந்த வேதியர் ஒருவர் வாயைக் கட்டிக் கொண்டு, தண்ணீர் கொண்டுவருவார். வழியில் அவரைப் பார்ப்பவர்கள், வெகுதூரம் விலகி நின்று விடுவார்கள். இது மட்டுமல்ல, மழை அதிகமாகப் பெய்யும் என்றால், சுவாமியின் திருமேனி கருமையாக, கருமை காட்டும். நாட்டில் பெரும்போர் மூளும் என்றால், சுவாமியின் திருமேனி செந்நிறமாக மாறும். இந்த அற்புதங்களை அறிந்தே, ‘ஐயன் நல்ல அதிசயன்’ என்று, இங்குள்ள இறைவனைத் திருஞானசம்பந்தர் துதித்தார். அருமையான அத்திருத்தலத்தில் வாழ்ந்தவர், தர்மசீலர். பெயருக்குத் தகுந்தாற்போல், இரக்கச் சிந்தனையாளராகவும் ஒழுக்க சீலராகவும் வாழ்ந்தார் அவர். வேதத்தில் கரைகண்ட வைதிகச் செல்வரான அவரிடம் பொருட்செல்வமும் நிறைந்து இருந்தது.
தினந்தோறும் ஆகம முறைப்படி, திரிபுராந்தகரை வழிபாடு செய்வதும்; நேரம் கிடைத்த போதெல்லாம் சிவபுராண விரிவுரை செய்வதுமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார் தருமசீலர். அவரது வீட்டிற்குத் தினந்தோறும் சிவனடியார்கள் பலர் வருவார்கள்; பசியைத் தணித்துக் கொண்டு செல்வார்கள். யாத்திரிகர்களுக்கு எல்லாம் தர்மசீலரின் இல்லம். தர்ம சத்திரமாகவே விளங்கியது. அங்கு அன்னதானமும் ஆடையளிப்பும் இடைவிடாமல் நடந்தேறின. தர்மசீலர் செய்யும் நற்காரியங்களில், அவர் மனைவியான மாணிக்கமும் சலிப்பில்லாமல் பங்கெடுத்துக் கொள்வாள். உத்தமியான அவளைப் பார்த்தாலே போதும்; பாவங்களெல்லாம் பறந்தோடும்.
உத்தமமான அந்தத் தம்பதிகளின் தான – தர்மங்களைப் பார்த்தோ என்னவோ, மேகங்கள் எல்லாம் ஓடி ஒளிந்தன. நான்கு- ஐந்து ஆண்டு களாக மழையே இல்லை. வாழவைக்கும் பயிர்கள் எல்லாம் வாடிப்போயின. வாட்டும் வறுமை எங்கும் வளர்ந்தது. மக்கள் பஞ்சத்தால் பரிதவித்தார்கள். உணவோ – உடையோ இல்லை. கோரமான பஞ்சம் கொக்கரித்து ஆடியது. மக்களின் பரிதவிப்பைக் கண்டு, தர்மசீலர் மனம் வாடினார். நெல்லை வாரிவாரிக் கொடுத்து உதவினார். அது தீர்ந்ததும் அரிசியாகவே, அள்ளிக் கொடுத்தார். கணக்கு வழக்கின்றி ஆடைகளைத் தந்தார். பணமாகவும் வழங்கினார்; அனைத்தும் தீர்ந்து போனதும், விளைநிலங்களைவிற்று, அதன்மூலம் வந்த செல்வத்தைக் கொடுத்தார்.
இனிமேல் கொடுப்பதற்குத் தர்மசீலரிடம் எதுவும் இல்லை என்ற நிலையில், உத்தமியான மாணிக்கம் தன்னிடம் இருந்த நகைகளையெல்லாம் விற்று, வாடியவர்களுக்கு எல்லாம் வழங்கினாள். உணவு தந்து, உடையளித்து உயிரைக் காத்த உத்தமத் தம்பதிகளின் செயலைக் கண்டு, தொண்டைநாடு முழுவதும் அவர்களை வாழ்த்தி வணங்கியது. வாழ்த்தும் வணக்கமும்
செல்வத்தைத் தந்துவிடுமா என்ன?
தர்மசீலரின் குடும்பமும் தர்மம் கேட்கும் நிலைக்குப் போய்விட்டது. வறுமையென்றால் என்ன என்பதே தெரியாத தர்ம சீலரின் குடும்பம், கடுமையான வறுமையில் சிக்கி, அல்லல்பட்டது. அதைக் கண்டு மக்கள் பலர் மனம் வருந்தினார்கள். அவர்களால் செய்ய முடிந்தது அதுதான். ஆனால், அடுத்தவர் கஷ்டம் தெரியாத வறுமையாளர் பலர், மேலும் மேலும் தர்மசீலரை நெருங்கி உதவி கேட்டார்கள். தர்மசீலர் என்ன செய்வார்? பாவம்… ‘‘தனிப்பெரும் சிறப்புடையது தர்மம். நாம் பிச்சை எடுத்தாவது, அடுத்தவர்க்கு. உதவவேண்டும்’’ எனத் தீர்மானித்துப் பிச்சை எடுத்தார். அதை அடுத்தவர்க்குக் கொடுத்தார். வரவர அதற்கும் முட்டுக்கட்டை விழுந்தது.
தர்மசீலருக்கு நாலுகை அரிசிகூடக் கிடைக்கவில்லை. உதவி கேட்போரும் குறைந்தனர். தர்மசீலரின் வீட்டில் எட்டு நாட்களாக அனைவரும் பட்டினி. அவர் வீட்டில் எறும்புகூட ஏகாதசி விரதம் இருக்கும்படியாக ஆயிற்று. உணவுக்கு வழியில்லா விட்டால்கூட, உமைமணாளரின் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஒன்பதாம் நாள், பகல் வேளை. கோயிலுக்குச் சென்று வழிபாட்டை முடித்த தர்மசீலர், தளர்ந்து போய்த் தள்ளாடித் தள்ளாடித் திரும்பினார். வீட்டின் வாயிலை அடைந்ததும், அப்படியே மயங்கி விழுந்தார்.
அப்போது, ‘‘காதடைக்கிறதே பசி! கண் இருட்டுகின்றதே! ஐயா! பசிக்கு ஏதாவது போடுங்களேன்! சிவா! சிவா!’’ எனக் கிறீச்சிட்டது ஒரு குரல். திடுக்கிட்டார் தர்மசீலர்; உடல் தளர்ச்சியையும் மறந்து ‘பளிச்’ சென்று எழுந்தார். குரல் வந்த திசையிலிருந்து விபூதி – ருத்ராட்சம் அணிந்த பழுத்த சிவனடியார் ஒருவர், வந்துகொண்டிருந்ததைப் பார்த்தார்.
அவரைப் பார்த்த தர்மசீலரின் உள்ளம் துடித்தது; ‘‘வாருங்கள்! வாருங்கள்!’’ என்று எதிர் கொண்டழைத்து. சிவனடியாருடன் வீட்டிற்குள் நுழைந்தார். பட்டினியை மறந்து எதிர்கொண்டாள் மனைவி. அவளிடம் அடியாரை ஒப்படைத்தார் தர்மசீலர். ‘எதற்கும் இன்னும் ஒரு முறை முயற்சிசெய்து பார்க்கலாம்’ என்ற எண்ணத்துடன், பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பிச்சை எடுக்கப் புறப்பட்டார், தர்மசீலர். ‘பரமன் அடியார் ஒருவர் பசியோடு பரி தவிப்பதை, என் பாவக் கண்களால் பார்க்க நேர்ந்ததே!’ என்ற வருத்தத்தோடு கண்ணீர்
வழியப் பிச்சை கேட்டார்.
அதைக் கண்ட நல்லவர் சிலர், ‘‘உத்தமமான தர்ம சீலருக்கா இந்த நிலை?’’ என்று பொருமிப் புலம்பி, தங்கள் வேதனையை வெளிக்காட்டாமல், தங்களிடம் இருந்த அரிசியில், ஆளுக்கொரு கையாக அள்ளிப் போட்டார்கள். பதினைந்து நிமிடத்திற்குள் ஒருபடி அரிசி (ஏறத்தாழ ஒன்றரை கிலோ) கிடைத்தது. தர்மசீலர் சந்தோஷத்தோடு வீடுதிரும்பினார். தன் அயர்ச்சியைப் பொருட்படுத்தாத மாணிக்கம், கணவர் கையிலிருந்து அரிசியை வாங்கி உணவு தயாரித்தாள்.
அடியார் வயிறார உண்டு விட்டு, வாயார வாழ்த்திவிட்டுப் போனார். மீதமிருந்த உணவை உண்பதற்காக, தர்ம சீலரும் அவர் மனைவியும் உட்கார்ந்தார்கள். அப்போது, ‘‘தீண்டாமேனித் திரிபுராந்தகா! பசி என் குடலைப் பிடித்து இழுக்கிறதே! ஐயோ!’’ என்ற அலறல் காதைப் பிளந்தது. தர்மசீலத் தம்பதிகளின் மனம் வருந்தியது. ‘‘மாணிக்கம்! அன்போடு நினைப்பவர்களின் உடம்பே, இறைவன் இருக்கும் திருக்கோயில். அடியார்கள் வடிவில் ஆண்டவன் வருவான். எனப் புராணங்கள் சொல்கின்றன. நல்லவேளை! இருக்கும் உணவை நாம் உண்பதற்கு முன், இந்த அடியார் வந்தார்’’ என்றார் தர்மசீலர்.
‘‘ஆமாம்! ஆமாம்!’’ என்றாள் மாணிக்கம்.இருவருமாக, வந்த அடியாரை வரவேற்று உட்காரவைத்தார்கள். இருந்த உணவை அன்போடு அவருக்குப் பரிமாறினார்கள். அப்போது தர்மசீலரின் கால்கள் தடுமாறின. அவர் மனைவிக்குத் தலை சுற்றியது. இருவரும் சமாளித்துக் கொண்டு. சுவரில் சாய்ந்தார்கள். சித்தம் சிவத்தையே சிந்தித்துக் கொண்டிருந்தது. அப்போது, ‘‘அம்மா!’’ என்று ஒரு தெய்வக்குரல், ஆகாயத்தில் கேட்டது. உண்பதற்காக உட்கார்ந்திருந்த அடியார் உருவம் ‘விர்’ ரென்று, விண்ணில் எழுந்து படர்ந்தது; ஒரே ஒளி வெள்ளம். ரிஷப வாகனத்தில், அம்பிகையுடன் திருவிற்கோலநாதர் காட்சிதந்தார். அற்புதமான அந்தத் தரிசனத்தைக். கண்டு, ‘‘ஆ!’’ என்று அலறிய தம்பதிகள் வணங்கினார்கள்.
‘‘வருந்த வேண்டாம்! உங்களுடைய உண்மையான தொண்டினை, உலகம் அறிவதற்காகவே யாம் இவ்வாறு அருள் நாடகம் ஆடினோம். இனி ஒவ்வொரு நாளும், குடநெல் உமக்குக் கோயிலில் கொடுப்போம். எடுத்துக்கொள்க!’’ என்று அருளிய முக்கண்ணன், அங்கிருந்து மறைந்தார். தம்பதிகளின் தளர்ச்சி நீங்கியது. ஆனந்த வசப்பட்ட அவர்கள், ‘‘அப்பனே! இவ்வளவும் உனது அருளாடலா?’’ என்றார்கள். அதன்பின் கோயிலுக்கு ஓடினார்கள்.
வணங்கி எழுந்தவர்களின் கண்களில், பலிபீடத்தருகே ஒரு குடம் நிறைய செந்நெல் இருந்தது தெரிந்தது. உள்ளத்தில் உவகையோடு அதை. எடுத்த தர்மசீலர், அடுத்தவர்களுக்குக் கொடுத்துத் தாமும் உபயோகித்தார். இறைவன் திருவருளால், மேகங்கள் கறுத்துப் பரவின. நாடு முழுதும் நல்லமழை பெய்தது. ஏரி, குளங்கள் எல்லாம் நிரம்பித் ததும்பின. வயல்வெளிகள் வளத்தைக் காட்டின. வறுமை என்பது ஓடிமறைந்தது.அறப்பணியிலேயே ஆயுளைக் கழித்த தர்மசீலரும், அவர் மனைவியும், செந்நெல்! வைத்த திருவிற்கோலநாதரின் திருவடி நிழலில் கலந்தார்கள்.
சந்திரமௌலி
The post தர்மம் கூடவே வரும்! appeared first on Dinakaran.