ஏகாதசி சிறப்புகள்!

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தரின் ஏகாந்த தினம் என்று குறிப்பிட வேண்டும். மோட்சத்திற்கு செல்ல ஏகாதசி விரதத்தை பலர் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. அந்த தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.
* சித்திரை வளர்பிறை ஏகாதசி – ‘காமதா ஏகாதசி’. தேய்பிறை ஏகாதசி – ‘பாப மோகினி ஏகாதசி’. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறுவார்கள்.
* வைகாசி வளர்பிறை ஏகாதசி – ‘மோகினி ஏகாதசி’. தேய்பிறை ஏகாதசி – ‘வருதித் ஏகாதசி’. இந்த காலங்களில் விரதம் இருப்பவர்கள் இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்த பலனைப் பெறலாம்.
* ஆனி வளர்பிறை ஏகாதசி – ‘நிர்ஜலா ஏகாதசி’. தேய்பிறை ஏகாதசி – ‘அபரா ஏகாதசி’. இந்த ஏகாதசிகளில் விரதம் மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
* ஆடி வளர்பிறை ஏகாதசி – ‘சயனி’, தேய்பிறை ஏகாதசி – ‘யோகினி’. அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கும்.
* ஆவணி வளர்பிறை ஏகாதசி – ‘புத்ரஜா’, தேய்பிறை ஏகாதசி – ‘காமிகா’. மக்கட்பேறு கிடைக்கப் பெறுவார்கள்.
* புரட்டாசி வளர்பிறை ஏகாதசி – ‘பத்மநாபா’, தேய்பிறை ஏகாதசி – ‘அஜா’. குடும்ப ஒற்றுமை வளரும்.
* ஐப்பசி வளர்பிறை ஏகாதசி – ‘பாபாங்குசா’, தேய்பிறை ஏகாதசி – ‘இந்திரா’. வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
* கார்த்திகை வளர்பிறை ஏகாதசி – ‘பிரபோதின’. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலன் உண்டு. தேய்பிறை ஏகாதசி – ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.
* மார்கழி ஏகாதசி – ‘வைகுண்ட ஏகாதசி‘ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி – ‘உத்பத்தி’ ஏகாதசி எனப்படும்.
* தை வளர்பிறை ஏகாதசி – ‘புத்ரதா’, தேய்பிறை ஏகாதசி – ‘சுபலா’. புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.
* மாசி வளர்பிறை ஏகாதசி – ‘ஜெயா’, தேய்பிறை ஏகாதசி – ‘ஷட்திலா’. மூதாதையர்கள் முக்தியடைய விரதம் இருக்கலாம்.
* பங்குனி வளர்பிறை ஏகாதசி – ‘ஆமலகி’ அன்று விரதம் இருக்க ஆயிரம் பசு தானம் செய்த பலன் கிடைக்கும்.தேய்பிறை ஏகாதசி – ‘விஜயா’. அன்று ஏழு வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை வணங்கினால், கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். ஒரு ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

 

The post ஏகாதசி சிறப்புகள்! appeared first on Dinakaran.

Related Stories: