கொலை உள்ளிட்ட தீவிர குற்றங்களை விசாரிக்க சென்னையில் 12 காவல் நிலையங்களில் சிறப்பு பிரிவு: டிஜிபி, போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த தீவிர குற்ற வழக்குகளில் சிறப்பு புலன் விசாரணை பிரிவை ஏன் நியமிக்க கூடாது என்று விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழ்நாடு டிஜிபி சார்பில் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொலை, கொள்ளை போன்ற தீவிர குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் 12 காவல் மாவட்டங்களில் தலா ஒரு காவல் நிலையத்தில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு சாட்சியங்களை கையாள்வது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ, வருமானவரி துறை விசாரணை முறைகளில் உள்ள சிறந்த உத்திகளை சேர்த்து மின்னணு சாட்சிய புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர்களின் ஒப்புதல் பெறவேண்டும் என்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி சிசிடிவி பதிவுகளும் வழக்குகளில் முக்கிய ஆதாரங்களாக கணக்கில் எடுக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவிக்கிறது. இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post கொலை உள்ளிட்ட தீவிர குற்றங்களை விசாரிக்க சென்னையில் 12 காவல் நிலையங்களில் சிறப்பு பிரிவு: டிஜிபி, போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: