நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது மோடி – சோனியா இன்று முற்றுகை: இறுதிக்கட்டத்தை எட்டியது கர்நாடகா தேர்தல் களம்

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இறுதி கட்ட பிரசாரத்தில் அனல் பறக்கிறது. இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் அம்மாநிலத்தில் போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும், வெளுத்து வாங்கும் மழையையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம் வரும் 8ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பா.ஜ தேசிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இந்தமுறை ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக பல்வேறு இலவச திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதன்படி இன்றும் நாளையும் பெங்களூருவில் உள்ள 18 தொகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திரமோடி , ரோட் ஷோ நடத்துவதை முன்னிட்டு அந்தந்த சாலைகளின் இரண்டு பக்கத்திலும் தடுப்பு கம்பி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. நரேந்திர மோடி சுமார் 18 தொகுதிகளின் வழியாக பயணித்து மக்களிடம் பாஜ கட்சிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கிறார். பிரதமர் நரேந்திரமோடியின் ரோட் ஷோவில் பூ உள்ளிட்டவை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடிக்கு போட்டியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று ஹூப்பள்ளியில் நடக்கும் தேர்தல் பேரணியில் பங்கேற்கிறார். ஹூப்பள்ளி தார்வார் காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார். இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஹூப்பள்ளி வரும் சோனியா, பேரணியில் பங்கேற்ற பின் பிற்பகல் 3.30 மணிக்கு புதுடெல்லி திரும்புகிறார். கர்நாடக தேர்தலில் சோனியா பங்கேற்கும் ஒரே பொதுக்கூட்டம் இதுவாகும். கர்நாடகாவில் ஒரே நாளில் பிரதமர் மோடியும், சோனியா காந்தியும் போட்டி பிரசாரத்தில் ஈடுபடுவதால் அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

* பிரதமர் பிரசாரம் மாடியில் யாரும் நிற்ககூடாது
பெங்களூருவில் இன்று மற்றும் நாளை பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஊர்வலமாக செல்ல உள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் ஊர்வலமாக வரும் சமயத்தில் மாடியில் யாரும் நிற்கக்கூடாது, குடியிருப்பு நுழைவாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்படும், அப்பொழுது யாரும் வெளியே வரக்கூடாது, ஊர்வலம் நடக்கும் போது முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்படும் என சில அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

The post நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது மோடி – சோனியா இன்று முற்றுகை: இறுதிக்கட்டத்தை எட்டியது கர்நாடகா தேர்தல் களம் appeared first on Dinakaran.

Related Stories: