அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிறைவு: சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நடந்தது. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும் உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்தனர்.

அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த 15ம் தேதி இரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். காவேரி மருத்துவமனையில் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை மையத்துக்கு நேற்று காலை 4:30 மணிக்கு மாற்றப்பட்டார். முன்னதாக அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வழங்கப்பட்டது.

காலை 5 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதய நிபுணர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழு, செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. மருத்துவமனையின் 7வது தளத்தில் ஸ்கை-வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து மயக்கவியல் துறை மூத்த மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. இதயத்திற்கு செல்லும் 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு இதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிறைவு: சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: