அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை

சென்னை: கர்நாடகாவில் பரவி வரும் ஜிகா வைரஸ் தமிழகத்தில் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு மண்டலம் மல்லிப்பூ நகர் பகுதியில் நடத்தப்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இதுவும் ஏடிஸ் கொசு வழியாக பரவுகிறது. கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டால் மூளை பாதிப்பு ஏற்படும். எனவே ஜிகா வைரஸ் அறிகுறிகளான தலைவலி, உடல் வலி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.

இந்த வைரஸ் 2 முதல் 7 நாட்களில் குணமடைந்து விடும். பொதுவாக வெளிநாடுகளில் பரவும் இந்த வைரஸ் தற்போது கர்நாடகாவில் பரவ தொடங்கி உள்ளது. ஜிகா வைரஸ் கொசுக்களை பரிசோதனை செய்தால் மட்டுமே இந்த வைரஸ் பரவி உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் 64 கொசுக்களிடம் ஆய்வு செய்ததில் ஜிகா வைரஸ் தமிழகத்தில் பரவவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: