மின்தடை தொடர்பான புகார்களை 94987 94987 எண்ணில் தெரிவிக்கலாம்… நெல்லையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

நெல்லை : மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 5,000 பணியாளர்கள் களப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நெல்லையில் மழை பாதிப்பை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “நெல்லை மாவட்டத்தில் 36 கிராமங்களில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ளநீரின் வேகத்தால் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் சீரான மின்சாரம் வழங்க 3 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிறப்பு குழுக்களில் 5,000 பணியாளர்கள் களப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீரான மின் விநியோகம் செய்ய தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், வங்கிகள் உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சார விநியோகம் தர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களில் பாதுகாப்புடன் சீரான மின் விநியோகம் கிடைக்கப்பட்டுள்ளது. 7 துணை மின் நிலையங்களில் மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் மழை நின்றுவிட்டதால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்யப்படுகிறது. நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள 2,78,557 மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.10,400 கி.மீ. மின்கம்பிகள் மற்றும் 19,466 மின்மாற்றிகள் உள்பட அனைத்து தளவாட பொருட்களும் இருப்பில் உள்ளன.மின்தடை தொடர்பான புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்,” என்றார்.

The post மின்தடை தொடர்பான புகார்களை 94987 94987 எண்ணில் தெரிவிக்கலாம்… நெல்லையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: