மனதை கொள்ளை கொள்ளும் கல்லிமாலி வியூ பாயிண்ட்

மூணாறு : கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ராஜாக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பொன்முடி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளது கல்லிமாலி வியூ பாயின்ட். பச்சை பசேல் என்று என்று காணப்படும் மலை குன்றுகளும் ,மூங்கில் காடுகளும் அதனை சுற்றி உள்ள நீர் தடாகமும், எப்போதும் வீசும் குளிர்ந்த காற்றும் கல்லிமாலி வியூ பாயிண்டின் சிறப்பு.

மேலும், சுற்றிலும் வனப்பகுதிக்கு உட்பட்ட மலை சரிவு பகுதி என்பதால் இங்கு சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை. ஜீப் சவாரி சுற்றுலா சாலைகளை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இங்கு செல்கின்றனர்.

படம் வரைவது போல சுற்றிலும் பசுமை நிறைந்த மலைகள், அதன் நடுவே ஒரு பள்ளத்தாக்கில் கூட்டமாக உள்ள மூங்கில் காடுகள், அதனை சூழ்ந்துள்ள தண்ணீர் என கல்லிமாலி வியூ பாயிண்ட் காண்பவரின் கண்களை கொள்ளை கொள்ளும்.

இந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசிக்க தினந்தோறும் நூற்றுக்கணக்கில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். கல்லிமாலி வியூ பாயிண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை காட்சி காண்போரின் மனதை வெகுவாக கவர்கிறது. மேலும் இங்கு நிறைய திரைப்பட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது மூணாறில் கோடை சுற்றுலா சீசன் என்பதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த வழியே உள்ள பயணத்தில் கல்லிமாலி வியூ பாயிண்ட் மட்டுமல்லாமல் பொன்முடி அணைக்கட்டு, பொன்முடி தொங்கு பாலம், குத்துங்கல் நீர்வீழ்ச்சி, வெள்ளத்தூவல் அருகே உள்ள பவர்ஹவுஸ், ஸ்ரீநாராயணபுரம் அருவி மற்றும் மரக்காணம் வியூ பாயிண்ட் போன்றவற்றை காணலாம்.

மூணாறில் இருந்து கல்லிமாலி வியூ பாயின்ட் செல்ல வேண்டுமானால், அடிமாலி- கல்லார்குட்டி-வெள்ளத்தூவல் (இரண்டு பவர்ஹவுஸ்)- பன்னியார்குட்டியிலிருந்து ஸ்ரீநாராயணபுரம் அருவி- பொன்முடி தொங்கு பாலம்,பொன்முடி அணை- கல்லிமாலி வியூ பாயிண்ட் – 26 கி.மீ. தேனி வழியாக வருபவர்கள் போடி-பூப்பாறை – ராஜாக்காடு வழியாக கல்லிமாலி வியூ பாயிண்ட் சென்றடையலாம்.

சுற்றுலாப்பயணிகள் கவனத்திற்கு

சுற்றுலா அதிகம் இங்கு வளர்ச்சி அடையவில்லை. எனவே சிறிய சாலைகள் வழியாக பயணம் செய்ய வேண்டும். ஆகையால் வேகமாக சாகச பயணத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் சாலை அருகே வாகனம் நிறுத்தி உணவு சாப்பிட்ட பின்பு பிளாஸ்டிக் உட்பட உள்ள குப்பைகளை இங்கு கொட்டாதீர்கள். இயற்கையை ரசிக்க வேண்டும் மாசுபடுத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மனதை கொள்ளை கொள்ளும் கல்லிமாலி வியூ பாயிண்ட் appeared first on Dinakaran.

Related Stories: