மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்காக முதல்வரிடம் குவியும் நிதி: கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் வழங்கினர்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். அதேபோல், மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தி.க. தலைவர் கி.வீரமணி நேரில் சந்தித்து முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக்கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவன பணியாளர்கள் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அக்கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் மற்றும் கட்சியின் நிதி என ரூ.10.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்.

தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் குமார் ஜயந்த், துணை தலைவர் எம்.ஏ.சித்திக், இணை செயலாளர்கள் எஸ்.ஏ.ராமன், எஸ்.திவ்யதர்ஷினி ஆகியோர் புயல் நிவாரண பணிக்கு தமிழ்நாடு இந்திய ஆட்சி பணி அலுவலர் சங்க உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை முதல்வரிடம் வழங்கினர். இதையடுத்து, தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநருமான அபாஷ் குமார், செயலாளரும், ஆயுதப்படை ஐஜியுமான ஜெய கவுரி ஆகியோர் முதல்வரை சந்தித்து அச்சங்கத்தின் சார்பில் ரூ.9.78 லட்சத்திற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உடனிருந்தார்.

மேலும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி, துரைசாமி முதல்வரை சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை பொதுநிவாரண நிதிக்கு வழங்கினர். அதேபோல், சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய் சங்கர், செயல் துணை தலைவர் கார்த்திக் ராஜசேகர் புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர். லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, இயக்குநர் அபிநயா முதல்வரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்காக முதல்வரிடம் குவியும் நிதி: கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: