பொன்னை : மேல்பாடி அருகே அதிகாலை போலீசார் வாகன சோதனையில் சினிமா பாணியில் 3 கார்களை 2 கி.மீ. தூரம் விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கவிழ்ந்த வாகனத்தில் 450 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது.வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி அருகே தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் கடத்துவதாக மேல்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பொன்னை இன்ஸ்பெக்டர் கருணா தலைமையில் எஸ்ஐ தருமன் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை முத்தரசிகுப்பம் பகுதியில் மாநில எல்லை சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாலை 5 மணியளவில் குஜராத் மாநில பதிவுவெண் கொண்ட 3 கார்கள் வந்தன.
அவற்றை போலீசார் நிறுத்த முயன்றபோது வேகமாக போலீசாரை முந்தி சென்றன. இதனையடுத்து போலீசார் 3 கார்களையும் தங்கள் வாகனங்களில் சுமார் 2 கி.மீ. தூரம் துரத்தி சென்ற நிலையில் ஒரு கார், சேர்க்காடு ஆர்டிஓ செக்போஸ்ட் பகுதியில் நிலைதடுமாறி, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. மற்ற 2 கார்கள் மின்னல் வேகத்தில் தப்பியது.
கவிழ்ந்த காரில் இருந்த டிரைவர் உட்பட 2 பேர் இருட்டில் புதர்களில் ஓடி தலைமறைவாகினர். தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தபோது 56 மூட்டைகளில் ₹4 லட்சம் மதிப்பிலான 450 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு குட்காவுடன் கார்களில் தப்பிய கும்பல் குறித்து விசாரித்து தேடி வருகின்றனர். சினிமா பாணியில் போலீசார் சைரன் ஒலித்தபடி அதிவேகமாக கார்களை விரட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.ஏற்கனவே இந்த பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கார்களில் குட்கா கடத்தி வந்து, தப்பி ஓடிய 5 பேர் கும்பலை கடந்த வாரம் பெங்களூருவில் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
The post மேல்பாடி அருகே அதிகாலை பரபரப்பு சினிமா பாணியில் 3 கார்களை 2 கி.மீ. தூரம் விரட்டிய போலீஸ் appeared first on Dinakaran.