2 திருமணத்தை மறைத்து 3வதாக வாலிபரை மணந்து மோசடி: கல்யாண ராணி கைது

கரூர்: கரூர் மாவட்டம் புஞ்சைக்காளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(30). கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா(36) என்பவருக்கும் கடந்த 12ம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையை சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது ரமேசுக்கு தெரியவந்தது. இதுகுறித்து ரேணுகாவிடம் ரமேஷ் கேட்டுள்ளார். அப்போது ரேணுகா, நான் உன்னை விட்டு செல்ல வேண்டுமானால் ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை கேட்டு ரமேஷை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். இதையறிந்த ரேணுகா தப்பி செல்வதற்காக கரூர் பேரூந்து நிலையம் வந்தார். இந்த தகவல் அறிந்ததும் கரூர் அனைத்து மகளிர் போலீசார், பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்று ரேணுகாவை கைது செய்து விசாரித்தபோது ரேணுகாவின் முதல் கணவருக்கு ஒரு மகன், மகள் உள்ளது தெரியவந்தது.

இதைதொடர்ந்து ரமேஷின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த கோவையை சேர்ந்த புரோக்கர்களான ஜெகநாதன், ரோஷினி மற்றும் பழனிக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் 3 பேரை தவிர்த்து வேறு யாருடனும் ரேணுகாவுக்கு திருமணம் நடந்ததா, வரன் தேடும் இளைஞர்களை குறி வைத்து ஏமாற்றி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post 2 திருமணத்தை மறைத்து 3வதாக வாலிபரை மணந்து மோசடி: கல்யாண ராணி கைது appeared first on Dinakaran.

Related Stories: