மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை திமுக புறக்கணிப்பதாக திருச்சி சிவா எம்.பி. அறிவிப்பு..!!

சென்னை: மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியை திமுகவும் புறக்கணிப்பதாக திருச்சி சிவா எம்.பி. அறிவித்துள்ளார். பல்வேறு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சியை புறக்கணிக்கவுள்ள நிலையில் திமுகவும் அறிவித்திருக்கிறது. மே 28-ல் நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே திரிணாமூல், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்.ஜே.டி., இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற கட்டட திருப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன.

இதேபோல் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறப்பதை கண்டித்து விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை இம்மாதம் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 உறுப்பினர்கள் வசதியாக அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல மாநிலங்களவையில் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர வசதி உள்ளது.

அதேநேரம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டால் 1,280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையிலும் மக்களவை அரங்கில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது நினைவுகூரத்தக்கது.

The post மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை திமுக புறக்கணிப்பதாக திருச்சி சிவா எம்.பி. அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: