மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி :மெரினாவில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை நினைவு கூறும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.மேலும் கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் இருந்து 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பேனா நினைவு சின்னம் அமைக்க 8,551.13 சதுர மீட்டர் அளவிலான இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது.

இந்த நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் நல்ல தம்பி , சென்னையைச் சேர்ந்த மீனவர் தங்கம், நாகர்கோவிலைச் சேர்ந்த மீனவர் சூசை அந்தோணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, எப்படி நேரடியாக இது போன்ற சுற்றுசூழல் சார்ந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்?. தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடலாமே? அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாமே? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் ரீதியான உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், பொது நல மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்தது.

The post மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: