மார்கழி திருவிழாவை அறநிலையத்துறையே நடத்தவேண்டும் சாதியின் பெயரால் கொடுமைகள் தொடர்வது தடுக்கப்படவேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: ‘மார்கழி திருவிழாவை அறநிலையத்துறையே நடத்த வேண்டுமென்றும், சாதியின் பெயரால் தொடரும் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்’ என்றும் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சேதுபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் உள்ள செல்லியாரம்மன் கோயிலில் பட்டியலின மக்களை அனுமதிப்பதில்லை. திருவிழாவுக்கு வரியும் வசூலிப்பதில்லை. கடந்த மே மாதம் திருவிழாவில் அனுமதி கோரியதற்காக சிலர் தாக்கப்பட்டனர். திருச்சுழி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

பின்னர் திருச்சுழி தாசில்தார் தலைமையில் ஜூன் 13ல் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அனைத்து சாதியினரும் திருவிழாவில் பங்கேற்கலாம் என முடிவு செய்யப்பட்டது. தற்போது மார்கழி பூஜைக்கும் எங்களை அனுமதிக்கக் கூடாது; வரி வசூலிக்கக் கூடாது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். கடந்த ஜூன் 13ல் எடுக்கப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை முடிவை அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், சாதியின் பெயரால் கொடுமைகள் தொடர்வதை தடுக்க வேண்டும்.

எந்த ஒரு தனிநபரும் அரசியலமைப்பு சட்டத்தின் படியான மத கடமைகளை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறைக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. கோயில் திருவிழாவை அறநிலையத்துறை நடத்த அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்கழி திருவிழாவை அறநிலையத்துறை நடத்த வேண்டும்.

மனுதாரர் கிராமத்தில் தீண்டாமை கொடுமை உள்ளதா என்பது குறித்து விஏஓ மற்றும் வருவாய் அலுவலரிடம் தாசில்தார் விசாரித்து கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையின் அடிப்படையில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் திருவிழாவில் பட்டியல் பிரிவினர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். கோயிலுக்கு தக்கார் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post மார்கழி திருவிழாவை அறநிலையத்துறையே நடத்தவேண்டும் சாதியின் பெயரால் கொடுமைகள் தொடர்வது தடுக்கப்படவேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Related Stories: