மணிப்பூர் எரியும் போது மக்களை சந்திக்காமல் எகிப்து பிரமிடுகளை பார்க்க சென்றார் பிரதமர் மோடி: திரிணாமுல் காங். எம்.பி. சவுகதா ராய் கடும் தாக்கு..!!

டெல்லி: மணிப்பூர் எரியும் போது மக்களை சந்திக்காமல் எகிப்து பிரமிடுகளை பார்க்க பிரதமர் மோடி சென்றார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் சவுகதா ராய் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் மக்களவையில் பேசினார். அப்போது,

மோடியைவிட இந்தியாவை அதிகம் நேசிக்கிறோம்:

தனிப்பட்ட முறையில் மோடியை வெறுக்கவில்லை. மோடியைவிட இந்தியாவை அதிகம் நேசிக்கிறோம். மேற்குவங்கத்தை ஒன்றிய அரசு பாரபட்சமாக நடத்துகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒதுக்கவேண்டிய ரூ.7300 கோடியை இன்றும் ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று சவுகதா ராய் குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறை வருமென நாடாளுமன்றத்திலேயே மிரட்டுகிறார்கள்:

அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் மிரட்டும் தொனியில் பேசுகின்றனர் என்று சவுகதா ராய் குற்றம்சாட்டினார். அமலாக்கத்துறை தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் பேசுகின்றனர். மேற்குவங்க மாநிலத்தை கண்காணிக்க பல்வேறு ஆணையங்களை ஒன்றிய அரசு அனுப்புகிறது. மோடி அரசை எதிர்த்து பேசினால் அமலாக்கத்துறை வீட்டுக்கு வருமென்று நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய அமைச்சர்கள் மிரட்டுகிறார் என்று சாடினார்.

ஒன்றிய அரசு மணிப்பூருக்கு எந்த ஆணையத்தையும் அனுப்பவில்லை:

ஒன்றிய அரசு மணிப்பூர் மாநிலத்துக்கு எந்த ஆணையத்தையும் அனுப்பவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மணிப்பூரில் வன்முறை வெடித்து 80 நாட்களுக்கு பிறகே பிரதமர் வாய் திறந்தார். மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட் காட்சிகள் இந்தியாவையே அதிரவைத்தது. மணிப்பூர் வன்முறை நிலவரத்தை பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது என்று சவுகதா ராய் தெரிவித்தார்.

மணிப்பூர் எரியும் போது பிரமிடுகளை பார்க்கச் சென்றார் மோடி:

மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது 7 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்று பயணம் மேற்கொண்டார். மணிப்பூர் மக்களை சந்திக்காமல் எகிப்து பிரமிடுகளை பார்க்க சென்றார் பிரதமர் மோடி என்று கடுமையாக தாக்கி பேசினார்.

பிரதமர் வியாபார பிரதிநிதியா? – திரிணாமுல் காங்கிரஸ்

பிரதமர் மோடி என்ன உலகத்தை சுற்றிவரும் தூதுவரா அல்லது விற்பனை பிரதிநிதியா? என்று சவுகதா ராய் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு வழி தவறுகிறபோது நாட்டின் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறது.
மணிப்பூர் அரசை உடனடியாக கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆளுநர்களை அனுப்பி தொல்லை கொடுக்கிறது பாஜக அரசு:

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உதவாக்கரை ஆளுநர்களை அனுப்பி ஆளும் அரசுகளுக்கு ஒன்றிய பாஜக அரசு தொந்தரவு அளிக்கிறது என்று சவுகதா ராய் எம்.பி. குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ஏவப்படுகிறது:

எதிர்க்கட்சித் தலைவர்கள் குறி வைத்தே அமலாக்கத்துறை, சிபிஐ ஏவப்படுகிறது. பாஜகவிடம் மிகப்பெரிய சலவை இயந்திரம் உள்ளது; ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அங்கு சென்றால் தூய்மையாகிவிடுவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற பாஜகவின் வாக்குறுதியை தற்போதும் செயல்படுத்தவில்லை. விவசாயிகள் தற்போதும் தற்கொலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று சவுகதா ராய் குறிப்பிட்டார்.

பல நிறுவனங்களை மிரட்டி வாங்குகிறது அதானி குழுமம்:

விமான நிலையம், சிமென்ட் ஆலைகள் உள்பட பல நிறுவனங்களை மிரட்டி அதானி குழுமம் வாங்குவதாக சவுகதா ராய் தெரிவித்துள்ளார். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களைவிட அதானி நிறுவனம் வேகமாக வளர்கிறது. இரண்டு மூன்று தொழில் குழுமங்கள் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்து பயன்படுகின்றன என்று கூறினார்.

வேலைவாய்ப்பை உருவாக்க மோடி அரசுக்கு திறன் இல்லை:

வாக்குறுதிப்படி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் மோடி அரசுக்கு இல்லை. ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம் என கூறினார், யாருக்கும் வழங்கவில்லை. கொரோனா காலத்தில் ஒரு கோடி பேர் வேலை இழந்தனர். லடாக், டோக்லாம் எல்லைகளில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்கிறது. வந்தே பாரத் ரயில்களை அவசர கதியில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துகிறது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறும் கருணை உள்ளம் கூட பிரதமருக்கு இல்லை என்று சவுகதா ராய் தெரிவித்தார்.

2024 தேர்தலை சந்திக்க மோடி அஞ்சுகிறார்:

2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சவுகதா ராய் தெரிவித்திருக்கிறார். மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசு மீது நம்பிக்கை இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டது என்றும் குறிப்பிட்டு பேசினார்.

அமைச்சரவையில் இடம்பிடிப்பதே நிஷிகாந்த் இலக்கு:

நிஷிகாந்த் துபே பேசியதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. தான் எப்படியாவது அமைச்சரவையில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று நினைப்பவர் நிஷிகாந்த் துபே. அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் ஆட்சியை நிஷிகாந்த் புகழ்ந்து பேசத்தான் செய்வார். 1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்காத கட்சியில் நிஷிகாந்த் இருக்கிறார். காந்தி படுகொலைக்குப் பின் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பில் நிஷிகாந்த் உள்ளார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் என்று சவுகதா ராய் தெரிவித்தார்.

The post மணிப்பூர் எரியும் போது மக்களை சந்திக்காமல் எகிப்து பிரமிடுகளை பார்க்க சென்றார் பிரதமர் மோடி: திரிணாமுல் காங். எம்.பி. சவுகதா ராய் கடும் தாக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: