மணிப்பூர் கலவரத்தில் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்கள், ஒன்றிய, மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

டெல்லி: மணிப்பூர் கலவரத்தில் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்கள், ஒன்றிய, மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். தங்களை பற்றிய விவரங்கள் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் அப்பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த மனு இன்று (ஜூலை 31, 2023) தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி ஜேபி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர் ஜாவேதுர் ரஹ்மான் மூலமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 20 அன்று, உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை தானாக முன்வந்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு சிறிது கால அவகாசம் தருவதாகவும், விரைவில் ஏதாவது செய்யாவிட்டால், உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து வேறு எந்த மாநிலத்துக்கும் மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்தது.

மணிப்பூர் மாநிலத்தில் ‘பாலியல் வன்கொடுமை மற்றும் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள்’ குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்க கோரி மற்றொரு பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் கலவரத்தில் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட 2 பெண்கள், ஒன்றிய, மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: