மாமல்லபுரம் கடலில் மீன் பிடிக்க விடாமல் தொல்லை: லாஞ்சரில் வந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கும் வெளி மாவட்ட மீனவர்கள்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார மீனவ குப்பங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை, பெரிய லாஞ்சரில் வந்து மீன் பிடிக்கும் மீனவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்குகின்றனர். இதனை, தமிழக கடலோர காவல் படை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழக கடலோர பகுதிகள் திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி என 14 மாவட்டங்கள் வரை (669 மைல்கள்) 1076 கிமீ தூரம் கொண்டுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது நீளமான கடற்கரையை தமிழகம் கொண்டுள்ளது. மேலும், திருவள்ளூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை 15 பெரிய துறைமுகங்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் முதல் ராமேஸ்வரம் வரை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகளே இருந்தன.

ஆனால், தற்போது ஆங்காங்கே உள்ள மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் விசை படகு, கட்டுமரம், சின்ன படகு, சுசுகி படகு, லாஞ்சர் உள்ளிட்ட பல்வேறு வகை படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். அதிக பட்சமாக, தமிழ்நாட்டு மீனவர்கள் நெத்திலி வலை, கவலை வலை, பாறை வலை, சுருக்கு வலை, இழு வலை, மிதவை வலை, வஞ்சீரம் வலை, மாபாச்சு வலை, சிக்க வைக்கும் வலை உள்ளிட்ட பல்வேறு வலைகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் சுற்று வட்டார மீனவ குப்பங்களான மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவனேரி குப்பம், சாலவான்குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு குப்பம், நெம்மேலி குப்பம், வட நெம்மேலி குப்பம், புதிய கல்பாக்கம், புதிய எடையூர் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ குப்பங்களில் 3,500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின், பிரதான தொழில் மீன்பிடி தொழிலாகும். மேலும், மேற்கண்ட குப்பங்களில் உள்ள மீனவர்கள் தினமும் 50 முதல் 100 கிமீ தூரம் செல்லும் விசைப்படகு, 15 முதல் 20 கிமீ தூரம் செல்லும் சிறிய வகை படகு மற்றும் சின்ன படகுகளில் நடுக்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

குறிப்பாக, இங்குள்ள மீனவர்கள் ஏராளமானோர் சிறிய வகை படகுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மேலும், மீனவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து, 2 அல்லது 3 நாட்கள் நடுக்கடலில் தங்கி மீன் பிடிக்க செல்கின்றனர். மேலும், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் நடுக்கடலில் விரித்து வைத்திருக்கும் மீன்பிடி வலைகள் காணாமல் போவதைக் கண்டு மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மீனவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். இதனால், அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இதேபோல், கடந்த மாதம் மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் சிலர் கடலுக்குள் சிறிய படகுகளில் சென்று மீன் பிடி வலைகளை விரித்து வைத்திருந்தனர். அப்போது, அங்கு பெரிய லாஞ்சரில் வந்த ஒரு கும்பல் மாமல்லபுரம் பகுதி மீனவர்களின் வலைகளை அறுத்து நாசம் செய்து அதிலிருந்து மீன்களை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி, மாமல்லபுரம் சுற்றுவட்டார மீனவர்கள் கடலில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று மீன் பிடிக்கும்போது புதுச்சேரி, காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமேஷ்வரம் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள அதிக செல்வாக்குடன் இருக்கும் மீனவர்கள் பெரிய, பெரிய லாஞ்சரில் வந்து பெரிய அளவிலான வலைகளை வீசி அனைத்து மீன்களையும் பிடித்து விடுகின்றனர். இதனால், இங்குள்ள மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மேலும், பெரிய லாஞ்சரில் வந்து மீன்பிடிப்பவர்கள் சிறிய வகை படகில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களை இது எங்க ஏரியா நீங்கள் இங்கு மீன்பிடிக்கக் கூடாது என மிரட்டி பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி, படகு மற்றும் வலைகளை அறுத்து சேதப்படுத்தி கண் இமைக்கும் நேரத்தில் தப்பித்து ஓடி விடுகின்றனர். மேலும், சில நேரங்களில் லாஞ்சரை, சிறிய படகு மீது மோதவிட்டு படகுகளை 2 அல்லது 3 துண்டுகளாக உடைத்து விடுகின்றனர்.
அப்போது, மீனவர்கள் கடலில் குதித்து உயிர் பயத்துடன் நீந்தி கரை வந்து சேரும் நிலை ஏற்படுகிறது. இதனால், சிறிய படகில் செல்லும் மீனவர்கள் அடிக்கடி காயமடைவதும், படகுகள் சேதமடைவதும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. மேலும், சில மீனவர்கள் லாஞ்சரில் வந்து தாக்கும் மீனவர்களுக்கு பயந்து கடலுக்கு செல்வது இல்லை. அப்படி, கடலுக்கு செல்லாத மீனவர்கள் கரையில் நின்று தூண்டில் மூலம் மீன் பிடிக்கின்றனர்.

இது சம்பந்தமாக, பலமுறை கடலோர காவல் படை போலீசாருக்கும், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் நேரில் சென்று புகார் தெரிவித்தும், எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குமுறுகின்றனர். எனவே, தமிழக அரசு நேரடியாக தலையிட்டு உள்ளூர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து லாஞ்சரில் வந்து பல்வேறு ஆயுதங்கள் மூலம் தாக்கும் தென் மாவட்ட மீனவர்களை பிடித்து, காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமல்லபுரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், ‘மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் 3500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். நாங்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்கிறோம். இங்குள்ள, மீனவர்கள் சிறிய வகை படகில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மீன் பிடிக்கும்போது, கடலூர், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமேஷ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய லாஞ்சர் வைத்திருப்பவர்கள் வந்து நீங்கள் இங்கு மீன்பிடிக்கக்கூடாது என ஆயுதங்களை காட்டி மிரட்டி அனைத்து மீன்களையும் பெரிய வலைகளை வீசி பிடித்துச்செல்வதோடு, எங்களை கத்தி, இரும்பு ராடு, பெரிய குச்சி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குவது மட்டுமல்லாமல் மீன்பிடி வலைகளை அறுத்து, படகுகளை சேதப்படுத்தி விடுகின்றனர். சில நேரங்களில், லாஞ்சரை கொண்டு சிறிய படகு மீது மோதி கவிழ்த்து விடுகின்றனர். இதனால், காயமடைந்து தண்ணீரில் நீந்தி கரை வந்து உயிர் பிழைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஒருசில, நேரங்களில் கை, கால்கள் உடைந்து நீந்தி கரை வந்து சேர முடியாமல் உயிரிழந்து விடுகின்றனர். இதேநிலை, தொடர்ந்தால் இங்குள்ள மீனவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இது சம்பந்தமாக, கடலோர காவல் படை மற்றும் மீன்வள துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், கடிதம் எழுதியும் மீனவர்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகள் 2 ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து மீனவ குப்பங்களுக்கும் நேரில் படகின் உரிமையாளரிடம் படகு உள்ளதா? சரியாக டீசல் மானியம் கிடைக்கிறதா? இல்லை படகுகளை வேறு ஒருவருக்கு விற்று விட்டு அரசை ஏமாற்றி டீசல் மானியம் பெறுகின்றனரா? என ஒருதலைபட்சமாக ஆய்வு செய்யும் அதிகாரிகள், மீனவர்களுக்கு வருமானம் கிடைக்கிறதா? மீன்பிடிப்பதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என எந்த அதிகாரியும் ஆய்வு செய்ய வேண்டும் மாமல்லபுரம் சுற்று வட்டார மீனவ பகுதிகளில் கடலில் மீனவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனரா? அல்லது மீன்பிடிப்பதில் அருகருகே உள்ள குப்பங்களில் பிரச்னை உள்ளதா? கடலில் மதுபானங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டிய கடலோர காவல் படை போலீசார் கடந்த சில ஆண்டுகளாக பணியில் இல்லாததை தெரிந்து கொண்டு அத்துமீறி பெரிய லாஞ்சரில் வந்து மீனவர்கள் சரமாரி தாக்குகின்றனர். எனவே, தமிழக அரசு நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு 24 மணி நேரமும் கடலோர காவல் படை போலீசாரை பணியமர்த்தியும், பெரிய லாஞ்சரில் வந்து மீன்பிடிக்கும் மீனவர்களை தடுத்தி நிறுத்தியும், இங்குள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.

The post மாமல்லபுரம் கடலில் மீன் பிடிக்க விடாமல் தொல்லை: லாஞ்சரில் வந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கும் வெளி மாவட்ட மீனவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: