முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் மணிப்பூரில் சிக்கி தவித்த 5 மாணவர்கள் மீட்பு: சென்னையில் உருக்கமான பேட்டி

சென்னை: மணிப்பூரில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டனர். சென்னை வந்த அவர்கள் உருக்கமான பேட்டி அளித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவை, எஸ்டி பட்டியலில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பிற இனத்தவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு கலவரமாக மாறி உள்ளது. இந்த அசாதாரண நிலையால், அங்கு சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்டு, பத்திரமாக அழைத்து வருவதற்கு, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் குழுவினர் மணிப்பூருக்கு நேரடியாக சென்று முகாமிட்டு, தமிழக மாணவ, மாணவியர்களை மீட்டு அழைத்து வருகின்றனர்.

அதன்படி, தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த முருகலட்சுமி (19), ராமநாதபுரம் விஷால் சீனிவாசன் (18), விருதுநகர் அருப்புக்கோட்டை சேர்ந்த சந்தோஷ் (18), பூந்தமல்லியை சேர்ந்த சேர்ந்த கார்த்திக் (21), புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த யுவராஜ் ஆகிய 5 பேர் மணிப்பூரில் இருந்து தமிழ்நாடு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், பின்பு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில், அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் 5 பேரும் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வந்த மாணவ, மாணவிகள்.

சென்னை வந்த மாணவ, மாணவிகள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த மாணவி முருக லட்சுமி: நான் மணிப்பூரில் BBES கோர்ஸ் படிக்க சென்றிருந்தேன். எங்கள் கல்லூரிக்கு முன்பு குண்டுகள் வெடித்தன. இதனால், தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்தது. உணவு, தண்ணீருக்கும் பிரச்னை ஏற்பட்டது. எனவே தமிழ்நாடு திரும்பலாம் என்று நினைத்தால், விமான கட்டணம் பல மடங்கு அதிகமாக இருந்தது. அப்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வந்து, எங்களை மீட்டு, அவர்களே விமான டிக்கெட் எடுத்து எங்களை அழைத்து வந்து விட்டனர். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி கார்த்திக்: மணிப்பூரில் நாங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வந்து விரைந்து நடவடிக்கை எடுத்து, எங்களை மீட்டனர். அதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மணிப்பூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டதால் நாங்கள் வெளியில் வர முடியாமல் ஹாஸ்டலில் இருந்து தவித்துக் கொண்டிருந்தோம். அதோடு இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. சரியான உணவு கிடைக்கவில்லை. நான் எம்எஸ்சி மாஸ்டர் டிகிரி படிக்க சென்றிருந்தேன். இதேபோல் உயர் படிப்புக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலர் வந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் மணிப்பூரில் சிக்கி தவித்த 5 மாணவர்கள் மீட்பு: சென்னையில் உருக்கமான பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: