மக்களவை தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜவை தோற்கடிக்கும்:இந்திய கம்யூ.பொது செயலாளர் டி.ராஜா உறுதி

பாட்னா: வரும் மக்களவை தேர்தலில் மதசார்பற்ற,ஜனநாயக கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட்டு பாஜவை தோற்கடிக்க உறுதிபூண்டுள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா நேற்று கூறுகையில், ‘‘பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட 15 கட்சிகள் கலந்து கொண்டன. எந்த ஒரு விஷயத்திலும் கூட்டாக முடிவெடுப்பதற்கான திறமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.

அந்த கூட்டத்தின் மூலம் பாஜவை தோற்கடித்து நாட்டையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாப்பதற்கு நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். இதை தொடர்ந்து அடுத்து நடைபெறும் கூட்டத்தில் இதர விஷயங்கள் குறித்து பேசப்படும். கூட்டத்துக்கு பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்காதது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு பின்னடைவு என்று சொல்ல முடியாது. எங்களை போன்ற சுதந்திரமான அரசியல் கட்சிகள் இடையே சில விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அவற்றை எல்லாம் கடந்து ஒன்றிணைவதற்கு கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. அரசியல் சட்டம், ஜனநாயகம்,மதசார்பின்மை, பன்முகத்தன்மைக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுவது என கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி தலைவர்கள் கூட்டம் இறுதி வரை இருந்தனர். விமானத்துக்கு நேரமாகி விட்டதால் அவர்கள் சீக்கிரம் கிளம்பி விட்டனர்’’ என்றார்.

The post மக்களவை தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜவை தோற்கடிக்கும்:இந்திய கம்யூ.பொது செயலாளர் டி.ராஜா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: