‘சொந்த ஊர் ஆரணி பக்கத்திலே, படிச்சதெல்லாம் வேலூர். இன்ஜினியரிங் முடிச்சேன், கல்யாணத்துக்கு அப்பறம் சென்னையிலே செட்டில் ஆகிட்டேன். வேலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துட்டு இருந்தேன். இங்கே சென்னை வந்த பிறகு இரண்டு குழந்தைகள், குடும்பம் இப்படி கொஞ்சம் பிஸி. அதனால் வேலையைத் தொடர முடியவில்லை. சின்ன வயதில் இருந்தே இந்த கிராஃப்ட் வேலைகள் செய்ய ரொம்பப் பிடிக்கும். அப்படி பொம்மைகளைக் கொண்டு வீட்டிலேயே ஆங்காங்கே டெகரேஷன் செய்திட்டே இருப்பேன். இதைப் பார்த்த நண்பர்கள் பலரும் இதை ஏன் நீ பிஸினஸா மாற்றக்கூடாதுன்னு கேட்டாங்க. அங்கே ஆரம்பிச்சதுதான் இந்த பொம்மைகள் டெகரேஷன்’. என்னும் கலைவாணி இரண்டு விதமான பொம்மைகள் செய்கிறார்.
‘உல்லன் கொண்டு பின்னப்படுகிற பொம்மை ஒன்று, இன்னொன்னு பார்பி பொம்மைகளை வாங்கி அதிலே என்ன கான்செப்ட்டோ அதற்கேற்ப டெகரேஷன் செய்துதருவது. பெரும்பாலும் பொம்மைகளை ஹோல்சேலாக வாங்கித்தான் இந்த டெகரேஷன் செய்வேன். பின்னர் இந்த பிஸினஸ்க்கு எனக்கு பெரிய உதவியாக இருந்தது சமூக வலைத்தளங்கள்தான். ஆரம்பத்தில் நண்பர்கள், தெரிந்த சுற்றத்தார் வட்டத்திலே இருந்து எனக்கு ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. தொடர்ந்து இதற்கு பெயர் வைக்கணுமே அப்படின்னு யோசிச்சு என் இரண்டு மகள்களுடைய பெயர்களான தியானா, சஞ்சனா என்கிற பெயரை மிக்ஸ் செய்து ‘தியாஷா_டால்ஸ்’ என பெயர் வெச்சேன். அத்தனை பொம்மைகளும் ஹேண்ட்மேட். உல்லன் பொம்மைகள் மண்டை மட்டும்தான் மரம், மத்த எல்லாமே கைகள்ல பின்னப்பட்டது. பார்பி பொம்மைகள் உங்களுக்கேத் தெரியும் ரெடிமேடா கிடைக்கும், அதிலே கோவில் சிலை கான்செப்ட்டில் அலங்காரங்கள் செய்வேன்’ என்னும் கலைவாணி பூப்புனித நீராட்டு விழா துவங்கி, திருமணம், சீமந்தம் வரையிலும் கூட பொம்மை செட் செய்து கொடுக்கிறார்.
‘உல்லன் பொம்மைகள் ரூ.400லும், பார்பி பொம்மைகள் ரூ.800லும் ஆரம்பித்து கேட்கப் படும் டிசைன்களுக்கு ஏற்ப விலை மாறும். உதாரணத்திற்கு திருமணம்ன்னா மணமகன், மணமகள் என்ன உடை, என்ன புடவை என்ன கலர், தலை அலங்காரம் எப்படி, நகைகள் எப்படி நண்பர்கள் , உறவினர்கள் எல்லாம் எப்படி வரப் போகிறார்கள் இப்படி எல்லாமே லிஸ்ட் போட்டு எனக்கு அனுப்பிடுவாங்க. அதை அப்படியே பொம்மை வெர்ஷனில் செய்து தருவேன். அடுத்து சீமந்தம் என்றாலும் அப்படித்தான். இது போல பொண்ணு வயதுக்கு வந்திட்டா, பாவாடை தாவணி விழான்னு ஒண்ணு ஆந்திராவிலே பிரபலம், அப்படி பாவாடை தாவணி விழாவிற்கும் கூட செட்டா பொம்மை கேட்கறதுண்டு. திருமணம், சீமந்தம், சங்கீத், ஹால்தி, மெஹந்தி ஃபங்ஷன், நிச்சயம், இப்படி எல்லாம் ஃபங்ஷனுக்கும் பொம்மை செட் செய்து தருகிறேன். என் கணவர் செந்தில் எனக்கு நிறைய சப்போர்ட் செய்கிறார். மேலும் குழந்தைகளும் நல்லா வளர்ந்திட்டாங்க.
அதனால் உதவிகளும் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பொம்மை முழுமையாக 2 முதல் 3 மணி நேரம் ஆகும். இப்போதைக்கு இந்து ஃபங்ஷன்கள்தான் நிறைய வருது. இன்னும் கிறிஸ்துவ கல்யாணம், இஸ்லாமிய ஃபங்ஷன் எல்லாம் வந்தா நல்லா டிசைன் செய்யலாம். இப்போதைக்கு வித்யாசமா ஒரு மாராத்தி கல்யாண பொம்மை செட் கேட்டாங்க. நிறைய வெளிநாடு வாழ் தமிழர்கள் கிட்டே இருந்து ஆர்டர்கள் வருது. அடுத்து ஹைதராபாத், தமிழ்நாட்டில் அதிகம் ஆர்டர்கள் வருது. கொஞ்சம் காப்பி பேஸ்ட் வர ஆரம்பிச்சிருக்கு. அதையும் மீறித்தான் நம்ம பிஸினஸ் செய்ய வேண்டியிருக்கு. என்ன ஒரே விஷயம் எங்க கிட்ட ஏற்கனவே தேடல்கள் நிறைய செய்து வேண்டிய மூலப்பொருட்கள் அத்தனையும் நம்ம கிட்டே இருக்கறதால பொம்மை செட் அப்படியே அவங்க கேட்கற மாதிரி கிடைக்கும். அடுத்து நவராத்திரி கொலுப்பொம்மைகள் செய்யணும், தொடர்ந்து மற்ற மதங்கள் சார்ந்த பொம்மைகளும் ஆர்டர்கள்வரணும்ன்னு அதற்கான வேலைகள்ல பிஸியா இருக்கேன்’.
– ஷாலினி நியூட்டன்
The post சீமந்தம் செய்யும் சீட்டி பொம்மை..! பாவாடை தாவணி கட்டும் பார்பி பொம்மை..! appeared first on Dinakaran.