கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடத்தப்பட்ட 700 கிலோ குட்கா பறிமுதல்: சரக்கு ஆட்டோ டிரைவர் கைது

அம்பத்தூர்: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர், கடந்த மாதம் 29ம் தேதி பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அதில், 58 கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும், ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தலின்படி, செங்குன்றம் துணை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் குட்கா விற்பனையாளர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம், அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது, புழல் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில், ரூ.80,000 மதிப்புள்ள 700 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். பின்னர், ஓட்டுனரான தென்காசி மலையராமபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்ராஜை(31) காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்கள் கடத்தியதும், போலீசார் வாகன சோதனை செய்வதை அறிந்து, புழல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடத்தப்பட்ட 700 கிலோ குட்கா பறிமுதல்: சரக்கு ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: