குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் திடீர் சாலை மறியல்

அண்ணாநகர்: கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசித்துவரும் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதன்காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்றிரவு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வராததால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல மணி நேரத்துக்கு பிறகு வந்த ஒருசில பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஏறியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் முறையான பதிலை தெரிவிக்காததால் மேலும் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் தென் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடம் வந்து பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதன்காரணமாக சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘’கோடைவிடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்கு போக்குவரத்து கழகம் முன் திட்டமிடல் இல்லாததால் வழக்கமான எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. கூடுதல் பேருந்துகள் விடப்படவில்லை. இதனால் பேருந்துகளில் இடம் கிடைக்காத பயணிகள் அடுத்த பேருந்துகளுக்காக விடிய விடிய காத்திருந்தனர். சில பேருந்தில் சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று நின்றுகொண்டே பயணித்து சொந்த ஊர்களுக்கு சென்றனர். குழந்தைகளுடன் வந்திருந்தவர்களின் நிலைமைதான் பரிதாபமாக இருந்தது. நூற்றுக்கணக்கானோர் பேருந்து கிடைக்காமல் விடிய, விடிய காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர்.

The post குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: