கொள்ளிடம் பாலத்தை உடைத்து ஆற்றில் கார் பாய்ந்து கேரள புதுமண தம்பதி பலி

திருச்சி: திருச்சியில் கொள்ளிடம் பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் கார் பாய்ந்ததில் கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதி பரிதாபமாக இறந்தனர். திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கொண்டயம்போட்டையில் இருந்து சமயபுரம் நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கேரள பதிவெண்ணை கொண்ட ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கொள்ளிடம் ஆற்று பாலத்தில் கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை 30 அடி வரை உடைத்துக்கொண்டு 50 அடி உயரத்திலிருந்து ஆற்றில் பாய்ந்து தலைகீழாக கவிழ்ந்து நொறுங்கியது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காருக்குள் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் இருந்த ஒரு ஆண் மற்றும் பெண் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான காரில் இருந்து 5 புதிய செல்போன்கள், வயலின், மேக்கப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கருணாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (36) என்பதும், இவரது மனைவி ஆராதி(25) என்பதும் தெரியவந்தது. ஸ்ரீநாத் ராஜஸ்தானில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவு மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இருவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது. சம்பவத்தன்று ஸ்ரீநாத் கேரளாவில் இருந்து தனது மனைவியுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார். கொள்ளிடம் 7வது விளக்கு தூண் பகுதியில் வரும் போது, அதிவேகத்தில் கார் ஓட்டி வந்த ஸ்ரீநாத் கண் அயர்ந்ததால் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து நடந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீநாத்தின் தாய் ஓமணா சசிதரன் கொடுத்த புகாரின்பேரில், போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொள்ளிடம் பாலத்தை உடைத்து ஆற்றில் கார் பாய்ந்து கேரள புதுமண தம்பதி பலி appeared first on Dinakaran.

Related Stories: