கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் முன் மனோஜ் சாமி ஆஜர்..!!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக மனோஜ் சாமி, சிபிசிஐடி போலீசார் முன் இன்று ஆஜரானார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பங்களாவில் 2014ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது இரவு காவலாளி ஓம் பகதூர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கனகராஜ், சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் ஈடுபட்ட நிலையில் கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.தற்போது சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகிய இருவரும் என மொத்தம் 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயானிடம் கோவையிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் 35 பக்கத்திற்கு வாக்குமூலம் அளித்து அதனை மலையாளத்தில் எழுதிக்கொடுத்து சென்றார். அதனை தொடர்ந்து அவர் கூறிய புதிய தகவலின் அடிப்படையில் மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த இருப்பதாக சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு தற்போது மனோஜ் சாமிக்கு சம்மன் அனுப்பினர்.

மனோஜ் சாமி என்பவர் கேரளாவில் பூசாரியாக பணியாற்றி வந்த நிலையில் கொடநாடு, கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதனால் அவர் 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் வருகின்ற வியாழன் 15ம் தேதி அன்று கோவையிலிருக்கக்கூடிய சிபிசிஐடி அலுவலகத்தில் மனோஜ் சாமி ஆஜராகுமாறு சிபிசிஐடி தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக மனோஜ் சாமி, சிபிசிஐடி போலீசார் முன் இன்று ஆஜரானார். மேலும் சயான் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மனோஜ் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் முன் மனோஜ் சாமி ஆஜர்..!! appeared first on Dinakaran.

Related Stories: