அப்பாவிகளை கொல்வதா? இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடை தைக்க கேரள நிறுவனம் மறுப்பு

திருவனந்தபுரம்: ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையான போர் தொடங்கி இரு வாரங்கள் ஆகிவிட்டன. இரு தரப்பிலும் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாகியுள்ளனர். காசாவை விட்டு லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து சென்று விட்டனர். இந்நிலையில் அப்பாவிகளை கொல்லும் இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடை தைத்து அனுப்ப முடியாது என்று கேரளாவை சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 1 லட்சம் சீருடைக்கான ஆர்டரையும் இந்த நிறுவனம் ரத்து செய்துவிட்டது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழில்பேட்டையில் இயங்கி வரும் மரியன் அப்பாரல்ஸ் என்ற நிறுவனம்தான் கடந்த 2012ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நாட்டு ராணுவத்திற்கான சீருடைகளை தைத்து அனுப்பி வருகிறது. மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தை கேரளாவில் தாமஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 95 சதவீதம் பெண்கள் ஆவர்.

இஸ்ரேல் ராணுவத்திற்கு மட்டுமில்லாமல் பிலிப்பைன்ஸ், கத்தார் ராணுவத்திற்கும், குவைத் விமானப்படை மற்றும் குவைத் தேசியப் படைக்கும் இங்கிருந்துதான் சீருடைகள் தைத்து அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவத்திற்காக 1 லட்சம் சீருடைக்கான ஆர்டர் வந்தது. ஆனால் அப்பாவிகளை கொல்வதாக கூறி இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடையை தைத்து அனுப்ப மறுத்த இந்த நிறுவனம், 1 லட்சம் சீருடைக்கான ஆர்டரை ரத்து செய்துவிட்டது.

The post அப்பாவிகளை கொல்வதா? இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடை தைக்க கேரள நிறுவனம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: