சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்தது. கனமழை காரணமாக வயநாடு சூரல்மலை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை காப்பாற்ற, கடந்த இரண்டு நாட்களாக தூக்கம் இன்றி இரவு பகல் பாராமல் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமான படையினர், ராணுவவீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு மக்களின் நிலைமை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விஜய், கமலஹாசன், ஜிவி பிரகாஷ், போன்ற பல பிரபலங்கள் கேரள மக்களின் நிலையை கண்டு வேதனையடைவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நிலச்சரிவு மீட்பு பணிக்காக நடிகர் விக்ரம் நிவாரணம் வழங்கியுள்ளார். இதற்காக கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 20 லட்சம் தொகையை விக்ரம் வழங்கியுள்ளார்.
The post கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.