கேரளாவைப் போல் தமிழ்நாட்டிலும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊதியம்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

நெல்லை: நெல்லை தியாகராஜநகரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான மாநில பயிலரங்கம் நேற்று நடந்தது. பயிலரங்கிற்கு சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன் தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் நமது செயல்பாடுகள் என்ற தலைப்பில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் பேசியதோடு, தீர்மானங்கள் குறித்தும் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக தன்னலம் கருதாது செயல்படுவது குறித்து பேசியதோடு, பயிலரங்கை நிறைவு செய்து வைத்தார். பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி: உள்ளாட்சி அமைப்புகள் சுயாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும். உள்ளாட்சிகளுக்கு மாநில அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. மாநில வரி வருவாயில் 30 சதவீதத்திற்கு குறையாமல் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செலவிட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு உடனடியாக மாவட்ட திட்டக்குழு அமைக்க வேண்டும். அதன் மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மன்றங்களில் திட்டமிடப்படும் செலவினங்களுக்கான தீர்மானங்களை நிறைவேற்றி அரசிடம் கூடுதலாக நிதி பெற முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், சாதாரண மக்களுக்கு ஏற்றவாறு கட்டிட வடிவமைப்பு மேற்கொள்கிற நிபுணர்கள், நகர்ப்புற செயல்பாட்டாளர்கள், பொருளியல், சமூகவியல் அறிஞர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்ட நகர்ப்புற கமிஷன் அமைக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணிகளுக்கு தங்கள் சொந்தப் பணத்தை செலவிடும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே கேரளாவைப் போல் தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். பட்ஜெட் நகல் பல்வேறு நகராட்சிகளில் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதை தமிழில் வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கேரளாவைப் போல் தமிழ்நாட்டிலும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊதியம்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: