காவேரி மருத்துவமனை மத்திய காவல் படை கண்காணிப்பில் உள்ளது: செந்தில்பாலாஜியிடம் விரைவில் அமலாக்கத்துறை விசாரணை?

சென்னை: செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற ஊழியர்கள் கையெழுத்து வாங்கியதையடுத்து, மத்திய காவல் படை கண்காணிப்பில் காவேரி மருத்துவமனை வந்தது. விரைவில் அவரிடம் விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொள்ள இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் முதல் வருகிற 23ம் தேதி மாலை வரை காவலில் எடுத்து விசாரித்து விட்டு, மீண்டும் மருத்துவமனையில் இருந்து காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிபதி அல்லி தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார். செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு நேற்று முன்தினம் (ஜூன் 16) நீதிமன்ற ஊழியர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து வாங்குவதற்காக மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர் சுய நினைவில் இல்லாததால் கையெழுத்து வாங்க முடியாமல் போனது.

இந்நிலையில், மீண்டும் நேற்று சென்று நீதிமன்ற ஊழியர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஆவணத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளித்து வந்த சிறைத்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு, மத்திய காவல் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை விசாரணை தொடங்க உள்ள நிலையில், காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள 7வது மாடி முழுவதும் மத்திய காவல் படையினரின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட இருக்கிறது.

The post காவேரி மருத்துவமனை மத்திய காவல் படை கண்காணிப்பில் உள்ளது: செந்தில்பாலாஜியிடம் விரைவில் அமலாக்கத்துறை விசாரணை? appeared first on Dinakaran.

Related Stories: