கர்நாடகத்திலிருந்து 2,37,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: 16 கண் மதகுகள் வழியாக டெல்டா பாசனத்துக்கு 81,500 கனஅடி திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43வது முறையாக 120 அடியை எட்டி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் நீர் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு படிப்படியாக 81 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், நுது, தாரஹா அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இதனால், நேற்று மாலை கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1,50,000 கனஅடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து 80,000 கனஅடி தண்ணீரும், நுகு – 5,000 தாரஹா – 2,000 கனஅடியும் திறந்து விடப்பட்டது. 4 அணைகளில் இருந்தும் தற்போது 2 லட்சத்து 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 75,000 கன அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று ஒகேனக்கலுக்கு வந்து சேரும் என்பதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

இதேபோல், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை 54,459 கன அடியாக நீர்வரத்து உயர்ந்ததால், 578 நாட்களுக்கு பிறகு தனது முழு கொள்ளளவான 120 அடியை நேற்று மாலை எட்டியது. மேட்டூர் அணையின் வரலாற்றில் 43வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி வீதம் நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.

அது படிப்படியாக அதிகரித்து நேற்றிரவு 8 மணிக்கு 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மேலும் 81,500 கனஅடியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், தண்ணீர் பாய்ந்தோடுவதை காண 16 கண் பாலம் எதிரேயுள்ள புதிய பாலத்தில் பொதுமக்கள் கூடியதால், சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் படுத்தினர்.

மேட்டூர் அணையின் இடதுகரையில் நீர்வளத்துறையினரும், பணியாளர்களும் நிறுத்தப்பட்டு சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். உபரிநீர் திறப்பால் வெள்ள நீர் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். செல்பி எடுக்கவோ, குளிக்கவோ செல்லக்கூடாது என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். அணையிலிருந்து அனல் மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாயில் 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 93.45 டிஎம்சியாக உள்ளது.

* முதல்வர் உத்தரவின்படி கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் நீர்திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் முறையே 27,000 ஏக்கரும், 18,000 ஏக்கரும் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

டிசம்பர் 13ம் தேதி வரை 137 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் கூறியுள்ளார். இதையடுத்து குறித்த நாளான ஆகஸ்ட் 1க்கு முன்பாகவே, நேற்று மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் காவிரியில் மலர் தூவி வணங்கினர். கிழக்கு மேற்கு கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது இது 63வது முறையாகும்

* முக்கொம்பு வந்தடைந்தது
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து நேற்று இரவு திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு 19 ஆயிரம் கன அடி வந்தடைந்தது. நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 31ம் தேதி (இன்று) அதிகாலை கல்லணை சென்றடையும். பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் டெல்டா பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.

The post கர்நாடகத்திலிருந்து 2,37,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: 16 கண் மதகுகள் வழியாக டெல்டா பாசனத்துக்கு 81,500 கனஅடி திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: